வைகல் மாடக்கோயில்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
துளமதி உடைமறி தோன்று கையினர்
இளமதி அணிசடை எந்தையார் இடம்
உளமதி உடையவர் வைகல் ஓங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே
(2)
மெய்யக மிளிரும் வெண்ணூலர், வேதியர்
மையகண் மலைமகளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன் முன்செய்த கோயிலே
(3)
கணிஅணி மலர்கொடு காலை மாலையும்
பணி அணிபவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி உமையொடு தாமும் தங்கிடம்
மணியணி கிளர்வைகல் மாடக்கோயிலே
(4)
கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே
(5)
விடமடை மிடற்றினர், வேத நாவினர்
மடமொழி மலைமகளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே
(6)
நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவிடம் இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே
(7)
எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை அவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகில் அணவிய மாடக் கோயிலே
(8)
மலையன இருபது தோளினான் வலி
தொலைவு செய்தருள் செய்த சோதியார் இடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாடக் கோயிலே
(9)
மாலவன் மலரவன் நேடி மால்கொள
மாலெரியாகிய வரதர் வைகிடம்
மாலை கொடணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாடக் கோயிலே
(10)
கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை அவர்பயில் வைகல் மாநகர்
வடமலை அனையநன் மாடக் கோயிலே
(11)
மைந்தனதிடம் வைகல் மாடக் கோயிலைச்
சந்தமர் பொழிலணி சண்பை !ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தை செய்பவர் சிவலோகம் சேர்வரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page