வேட்டக்குடி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்திரைக்கள் கொணர்ந்தெறியும் திருவேட்டக் குடியாரே
(2)
பாய் திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்கும்
காசினியில் கொணர்ந்தட்டும் கைதல்சூழ் கழிக்கானல்
போய்இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்தழகார்
தீஎரிகை மகிழ்ந்தாரும் திருவேட்டக் குடியாரே
(3)
தோத்திரமா மணல்இலிங்கம் தொடங்கிய ஆனிரையிற்பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறை நால்வர்க்கறம்புரி நூல் அன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாரும் திருவேட்டக் குடியாரே
(4)
கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தம் கலந்தெங்கும்
அலவஞ்சேர் அணைவாரிக் கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய்
நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையாள் அவளோடும்
திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே
(5)
பங்கமார் கடல்அலறப் பருவரையோடரவுழலச்
செங்ண்மால் கடையஎழு நஞ்சருந்தும் சிவமூர்த்தி
அங்க நான்மறை நால்வர்க்கறம் பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாரும் திருவேட்டக் குடியாரே
(6)
நாவாய பிறைச்சென்னி நலந்திகழும் இலங்கிப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியும் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையால் எயில்மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே
(7)
பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோடு ஒருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே
(8)
துறையுலவு கடலோதம் சுரிசங்கம் இ டறிப்போய்
நறையுலவும் பொழில்புன்னை நன்னீழல் கீழமரும்
இறைபயிலும் இராவணன்தன் தலைபத்தும் இருபதுதோள்
திறலழிய அடர்த்தாரும் திருவேட்டக் குடியாரே
(9)
அருமறை நான்முகத்தானும் அகலிட நீர்ஏற்றானும்
இருவருமாய் அளப்பரிய எரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே
(10)
இகழ்ந்துரைக்கும் சமணர்களும் இடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொல் கொள்ளேன்மின், பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலில் நிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே
(11)
தெண்திரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்தமிழ்நூல் இவைபத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோடுயர் வானத்திருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page