வன்பார்த்தான் பனங்காட்டூர்:

<– தொண்டை நாடு

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சுந்தரர் தேவாரம்:

(1)
விடையின்மேல் வருவானை, வேதத்தின் பொருளானை
அடையில் அன்புடையானை, யாவர்க்கும் அறிவொண்ணா
மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையில் கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே
(2)
அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப்
பிறையும் கங்கையும் சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார்
பறையும் சங்கொலி ஓவாப் படிறன்தன் பனங்காட்டூர்
உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வென்னே
(3)
தண்ணார் மாமதிசூடித் தழல்போலும் திருமேனிக்கு
எண்ணார் நாண்மலர் கொண்டங்கு இசைந்தேத்தும் அடியார்கள்
பண்ணார் பாடலறாத படிறன்தன் பனங்காட்டூர்
பெண்ஆணாய பிரானைப் பேசாதார் பேச்சென்னே
(4)
நெற்றிக்கண் உடையானை, நீறேறும் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக், கோணாதார் மனத்தானைப்
பற்றிப் பாம்பரை ஆர்த்த படிறன்தன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றேறும் பிரானைப் பேசாதார் பேச்சென்னே
(5)
உரமென்னும் பொருளானை, உருகில் உள்ளுறைவானைச்
சிரமென்னும் கலனானைச் செங்கண்மால் விடையானை
வரமுன்னம் அருள்செய்வான், வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பரமன் எங்கள் பிரானைப் பரவாதார் பரவென்னே
(6)
எயிலார் பொக்கம்எரித்த எண்தோள் முக்கண் இறைவன்
வெயிலாய்க் காற்றெனவீசி மின்னாய்த்தீ என நின்றான்
எயிலார் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக்கடிமைக் கண் பயிலாதார் பயில்வென்னே
(7)
மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன், வேத முதல்வன்
கையில் மான் மழுவேந்திக் காலன் காலம்அறுத்தான்
பைகொள் பாம்பரையார்த்த படிறன்தன் பனங்காட்டூர்
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே
(8)
வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச் சீறடியாளைப் பாகம் வைத்துகந்தானை
மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்தெங்கள் பிரானை நினையாதார் நினைவென்னே
(9)
மழையானும், திகழ்கின்ற மலரோன் என்றிருவர் தாம்
உழையா நின்றுஅவர் உள்க உயர் வானத்துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற்கு அடிமைக்கட்கு குழையாதார் குழைவென்னே
(10)
பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச்
சீரூரும் திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன், அடியன்சொல், அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார் உயர்வானத்துயர்வாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page