(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
சம்பந்தர் தேவாரம்:
(1)
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல் விளையாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறல்உளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை அண்ணல்அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும்உடனே
(2)
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி ஆடல்கவின் எய்திஅழகார்
மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறல்உளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்திஎரி புன்சடையினுள்
அலைகொள்புனல் ஏந்து பெருமான்அடியை ஏத்தவினை அகலும் மிகவே
(3)
காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலை வழிபாடு செய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறல்உளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகம்அசையா அழகிதாப்
பாலையன நீறுபுனைவான் அடியை ஏத்தவினை பறையும் உடனே
(4)
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கைஅரு மைந்தர்களும் மன்னு புனலாடிமகிழ் மாகறல்உளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையினான் அடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்தி வழிபாடு நுகரா எழுமினே
(5)
துஞ்சுநறு நீலமிருள் நீங்கஒளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நடமாட மலி மாகறல்உளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர் மழுவாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதன்அடியாரை நலியா வினைகளே
(6)
மன்னு மறையோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகையால் இனிதிறைஞ்சி இமையோரில்எழு மாகறல்உளான்
மின்னைவிரி புன்சடையின் மேல்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல் வினைகள் ஒல்கஉயர் வானுலகம் ஏறல்எளிதே
(7)
வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறல்உளான், எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடையா வினைகள் அகலும் மிகவே
(8)
தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறல்உளான்
பாசுபத இச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி ஈசனென ஏத்தவினை நிற்றலில போகும்உடனே
(9)
தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்ற மதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறல்உளான்
சாயவிரல் ஊன்றிய இராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுகழ் ஏத்தும்அடியார்கள் வினை ஆயினவும் அகல்வதெளிதே
(10)
காலினல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமலரானும் அறியாமை எரியாகிஉயர் மாகறல்உளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடிஉடனாய்
ஆலும் விடையூர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே
(11)
கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும் வகையால் பரவி அரனைஅடி கூடுசம்பந்தன் உரையால்
மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறல்உளான் அடியையே
உடையதமிழ் பத்தும் உணர்வார்அவர்கள் தொல்வினைகள் ஒல்கும்உடனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...