பொதுத் திருப்பதிகங்கள்: சம்பந்தர் தேவாரம் (1):

<– பொதுத் திருப்பதிகங்கள்

(1)
ஆரூர், தில்லையம்பலம், வல்லம், நல்லம், வட கச்சியும், அச்சிறுபாக்க, நல்ல
கூரூர் குடவாயில், குடந்தை, வெண்ணி, கடல்சூழ் கழிப்பாலை, தென்கோடி, பீடார்
நீரூர்வயல் நின்றியூர், குன்றியூரும், குருகாவையூர், நாரையூர், நீடு !கானப்
பேரூர், நன்னீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே

(2)
அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம், கொடுங்குன்றமும்
கண்ணார் கழுக்குன்றம், கயிலை, கோணம் பயில் கற்குடி, காளத்தி, வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம், பருப்பதம் பேணிநின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்கடல் நீந்தலாம் காரணமே

(3)
அட்டானம் என்றோதிய நாலிரண்டும், அழகன்உறை காஅனைத்தும், துறைகள்
எட்டாம், திருமூர்த்தியின் காடொன்பதும், குளமூன்றும், களம்அஞ்சும், பாடி நான்கும்
மட்டார்குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும் இடமாகிய பாழி மூன்றும்
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பா அரும்பாவங்கள் ஆயின தேய்ந்தறவே

(4)
அறப்பள்ளி, அகத்தியான் பள்ளி, வெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி, சீர் மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளி, வெள்ளச்சடையான் விரும்பும் இடைப்பள்ளி, வண் சக்கர மால்
உறைப்பால் அடிபோற்றக் கொடுத்தபள்ளி உணராய் மடநெஞ்சமே உன்னி நின்றே

(5)
****
ஆறைவட மாகறல், அம்பர், ஐயாறு, அணியார் பெருவேளுர், விளமர், தெங்கூர்
சேறை, துலை புகலூர் அகலாது இவை காதலித்தானவன் சேர்பதியே

(6)
மனவஞ்சர் மற்றோடமுன் மாதராரும் மதிகூர் திருக்கூடலில் ஆலவாயும்
இன வஞ்சொல்இலா இடைமாமருதும், இரும்பைப்பதி மாகாளம், வெற்றியூரும்
கனம்அஞ்சின மால்விடையான் விரும்பும் கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர்
தனம்என்சொலில் தஞ்சமென்றே நினைமின் தவமாம், மலமாயின தானறுமே

(7)
மாட்டூர், மடப் பாச்சிலாச்சிராமம், முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி
காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர், மற்றுஉறையூர் அவையும்
கோட்டூர், திருஆமாத்தூர், கோழம்பமும், கொடும் கோவலூர், திருக் குணவாயில்,
*****

(8)
*** குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதிநியமம்
போற்றூர் அடியார் வழிபாடு ஒழியாத் தென் புறம்பயம், பூவணம், பூழியூரும்
காற்றூர், வரை அன்றெடுத்தான் முடிதோள் நெரித்தான் உறைகோயில் என்றென்று நீகருதே

(9)
நெற்குன்றம், ஓத்தூர், நிறைநீர் மருகல், நெடுவாயில் குறும்பலா, நீடுதிரு
நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம், நளிர்சோலையும் சேனை மாகாளம், வாய்மூர்
கற்குன்றம் ஒன்றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனும், மாமலரோனும் காணாச்
சொற்கென்றும் தொலைவிலாதான் உறையும் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே

(10)
குத்தங்குடி, வேதிகுடி, புனல்சூழ் குருந்தங்குடி, தேவன்குடி மருவும்
அத்தங்குடி, தண்திரு வண்குடியும், அலம்பும் சலம்தன் சடை வைத்துகந்த
நித்தன் நிமலன் உமையோடும்கூட நெடுங்காலம் உறைவிடம்என்று சொல்லாப்
புத்தர்புறம் கூறிய, புன்சமணர் நெடும்பொய்களை விட்டு நினைந்துய்மினே

(11)
அம்மானை, அருந்தவமாகி நின்ற அமரர்பெருமான் பதியான உன்னிக்
கொய்ம்மாமலர்ச் சோலை குலாவு கொச்சைக்கிறைவன், சிவஞானசம்பந்தன் சொன்ன
இம்மாலை ஈரைந்தும் இருநிலத்தில் இரவும்பகலும் நினைந்தேத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page