பெரும்புலியூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 

(சம்பந்தர் தேவாரம்):

(1)
மண்ணுமோர் பாகமுடையார்; மாலுமோர் பாகமுடையார்
விண்ணுமோர் பாகமுடையார்; வேதமுடைய விமலர்
கண்ணுமோர் பாகமுடையார்; கங்கை சடையில் கரந்தார்
பெண்ணுமோர் பாகமுடையார் பெரும்புலியூர் பிரியாரே
(2)
துன்னு கடல் பவளஞ்சேர் தூயன நீண்ட திண்தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினாள் ஒரு கங்கைக்
கன்னிகளின் புனையோடு கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
(3)
கள்ள மதித்த கபாலம் கைதனிலே மிக ஏந்தித்
துள்ள மிதித்து நின்றாடும் தொழிலர், எழில்மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல் மிளிர்கின்ற
பிள்ளைமதிப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
(4)
ஆடல் இலையமுடையார்; அருமறை தாங்கி ஆறங்கம்
பாடல் இலையமுடையார்; பன்மை ஒருமை செய்து, அஞ்சும்
ஊடலில் ஐயமுடையார்; யோகெனும் பேரொளி தாங்கிப்
பீடல் இலையமுடையார் பெரும்புலியூர் பிரியாரே
(5)
தோடுடையார் குழைக் காதில், சுடுபொடியார், அனலாடக்
காடுடையார், எரி வீசும் கையுடையார், கடல் சூழ்ந்த
நாடுடையார்; பொருளின்ப நல்லவை நாளும் நயந்த
பீடுடையார், பெருமானார், பெரும்புலியூர் பிரியாரே
(6)
கற்றதுறப் பணி செய்து காண்டும் என்பாரவர் தங்கண்
முற்றிது அறிதும் என்பார்கள் முதலியர், வேத புராணர்
மற்றிது அறிதும் என்பார்கள் மனத்திடையார், பணி செய்யப்
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே
(7)
மறையுடையார், ஒலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடையார் குறை தீர்ப்பார்; குழகர்; அழகர்; நம் செல்வர்
கறையுடையார் திகழ் கண்டம், கங்கை சடையில் கரந்தார்
பிறையுடையார் சென்னி தன்மேல் பெரும்புலியூர் பிரியாரே
(8)
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளிதாகித்
துறவியும் கூட்டமும் காட்டித், துன்பமும் இன்பமும் தோற்றி
மறவியம் சிந்தனை மாற்றி வாழவல்லார் தமக்கென்றும்
பிறவியறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே
(9)
சீருடையார்; அடியார்கள் சேடர் ஒப்பார், சடை சேரும்
நீருடையார், பொடிப் பூசு நினைப்புடையார், விரி கொன்றைத்
தாருடையார், விடையூர்வார், தலைவர், ஐந்நூற்றுப் பத்தாய
பேருடையார், பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
(10)
உரிமையுடை அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டியருள் செயும் ஆதிமுதல்வர்
கருமையுடை நெடுமாலும் கடிமலர் அண்ணலும் காணாப்
பெருமையுடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
(11)
பிறைவளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை
நறைவளரும் பொழில்காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
மறைவளரும் தமிழ்மாலை வல்லவர்தம் துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சினராகி நீடுலகத்திருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page