பூவனூர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறுநூறாயிரம் நண்ணினார்
பாவமாயின பாறிப் பறையவே
தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே
(2)
என்னன் என்மனை எந்தை எனாருயிர்
தன்னன், தன்அடியேன் தனமாகிய
பொன்னன், பூவனூர் மேவிய புண்ணியன்
இன்னன் என்றறிவொண்ணான் இயற்கையே
(3)
குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றும் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்றராவினன் பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே
(4)
ஆவின் மேவிய ஐந்தமர்ந்தாடுவான்
தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவனூர் புகுவார் வினை போகுமே
(5)
புல்லம் ஊர்தியூர் பூவனூர், பூம்புனல்
நல்லம், ஊர்தி நல்லூர், நனிபள்ளியூர்
தில்லையூர், திருவாரூர், சீர்காழி, நல்
வல்லமூர், என வல்வினை மாயுமே
(6)
அனுசயப்பட்டு அதுஇது என்னாதே
கனிமனத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனிதனைப் பூவனூரனைப் போற்றுவார்
மனிதரில் தலையான மனிதரே
(7)
ஆதி நாதன், அமரர்கள் அர்ச்சிதன்
வேத நாவன், வெற்பின் மடப்பாவையோர்
பாதியானான், பரந்த பெரும்படைப்
பூத நாதன், தென்பூவனூர் நாதனே
(8)
பூவனூர், தண் புறம்பயம், பூம்பொழில்
நாவலூர், நள்ளாறொடு, நன்னிலம்
கோவலூர், குடவாயில், கொடுமுடி
மூவலூரும் முக்கண்ணனூர் காண்மினே
(9)
ஏவம் ஏதுமிலா அமண் ஏதலர்
பாவகாரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவதேவன் திருநெறியாகிய
பூவனூர் புகுதப் பெற்ற நாளின்றே
(10)
நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்கும் கழல்
பூரணன் திருப்பூவனூர் மேவிய
காரணன், எனை ஆளுடைக் காளையே
(11)
மைக்கடுத்த நிறத்தரக்கன் வரை
புக்கெடுத்தலும் பூவனூரன் அடி
மிக்கடுத்த விரல் சிறிதூன்றலும்
பக்கடுத்த பின் பாடி உய்ந்தானன்றே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page