புணர்ச்சிப் பத்து

<– திருவாசகம்

(1)
சுடர்பொற் குன்றைத், தோளா முத்தை
வாளா தொழும்புகந்து
கடைபட்டேனை ஆண்டு கொண்ட
கருணாலயனைக், கருமால் பிரமன்
தடைபட்டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்த என்ஆரமுதைப்
புடைபட்டிருப்பதென்று கொல்லோ, என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

(2)
ஆற்றகில்லேன் அடியேன் – அரசே
அவனிதலத்(து) ஐம்புலனாய
சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து
சிவனெம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்கு!நெக்
குள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்பதென்று கொல்லோ, என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

(3)
நீண்ட மாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை, விருப்பிலேனை
ஆண்டு கொண்ட என்ஆரமுதை
அள்ளூறுள்ளத்(து) அடியார் முன்
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி
விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்பதென்று கொல்லோ, என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

(4)
அல்லிக் கமலத்தயனும் மாலும்
அல்லாதவரும் அமரர் கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத்தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத், தேனைப் பாலை
நிறைஇன்னமுதை, அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வதென்று கொல்லோ, என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

(5)
திகழத் திகழும் அடியும் முடியுங்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் – இம்மாநில முழுதும்
நிகழப் பணிகொண்டென்னை !ஆட்கொண்
டாவா என்ற நீர்மையெல்லாம்
புகழப் பெறுவதென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

(6)
பரிந்து வந்து பரமானந்தம்
பண்டே அடியேற்கருள் செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில்
அருமாலுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய, உள் நீர்
உரோமஞ் சிலிர்ப்ப, உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்பதென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

(7)
நினையப் பிறருக்கரிய நெருப்பை
நீரைக், காலை, நிலனை, விசும்பைத்
தனையொப்பாரை இல்லாத் தனியை
நோக்கித் தழைத்துத், தழுத்த கண்டங்
கனையக், கண்ணீர் அருவி பாயக்
கையுங் கூப்பிக், கடிமலராற்
புனையப் பெறுவதென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

(8)
நெக்கு நெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலுந் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்துப்
புக்கு நிற்பதென்று கொல்லோ, என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

(9)
தாதாய் – மூவேழுலகுக்குந்
தாயே, நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதா மணியே என்றென்றேத்தி
இரவும் பகலும் எழிலார் பாதப்
போதாய்ந்தணைவதென்று கொல்லோ, என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

(10)
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்,
கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
மூப்பாய், மூவா முதலாய் நின்ற
முதல்வா,- முன்னே எனையாண்ட
பார்ப்பானே, எம் பரமா என்று
பாடிப் பாடிப் பணிந்து, பாதப்
பூப்போதணைவதென்று கொல்லோ, என்
பொல்லா மணியைப் புணர்ந்தே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page