பிடித்த பத்து

<– திருவாசகம்

(1)
உம்பர்கட்கரசே, ஒழிவற நிறைந்த
யோகமே, ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே, சீருடைக் கழலே
செல்வமே சிவபெருமானே
எம் பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

(2)
விடை விடாதுகந்த விண்ணவர் கோவே
வினையனேனுடைய மெய்ப்பொருளே
முடை விடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே, கருணைமா கடலே
இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

(3)
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

(4)
அருளுடைச் சுடரே, அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க்கரசே
பொருளுடைக் கலையே, புகழ்ச்சியைக் கடந்த
போகமே, யோகத்தின் பொலிவே
தெருளிடத்தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெருமானே
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

(5)
ஒப்புனக்கில்லா ஒருவனே, அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு
விழுமிய(து) அளித்ததோர் அன்பே
செப்புதற்கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

(6)
அறவையேன் மனமே கோயிலாக் !கொண்டாண்
டளவிலா ஆனந்தம் அருளிப்
பிறவி வேரறுத்தென் குடிமுழுதாண்ட
பிஞ்ஞகா, பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே, அடியேன்
செல்வமே சிவபெருமானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

(7)
பாசவேரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா(று) அடியனேற்கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே, செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

(8)
அத்தனே, அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே, யாதும் ஈறில்லாச்
சித்தனே, பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே, சிவபெருமானே
பித்தனே, எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

(9)
பால் நினைந்தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து, புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

(10)
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே, மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page