(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சுந்தரர் தேவாரம்):
(1)
தூவாயா, தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா, கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
ஆவாஎன் பரவையுண் மண்டளி அம்மானே
(2)
பொன்னானே, புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே, தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி
மின்னானே, செக்கர்வானத்திள ஞாயிறு
அன்னானே, பரவையுண் மண்டளி அம்மானே
(3)
நா மாறாதுன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென், புண்ணியா, புண்ணியம் ஆனானே
பேய் மாறாப் பிணமிடு காடுகந்து ஆடுவாய்க்கு
ஆமாறென் பரவையுண் மண்டளி அம்மானே
(4)
நோக்குவேன் உன்னையே, நல்லன நோக்காமைக்
காக்கின்றார் கண்டுகொண்டார் ஐவர், காக்கிலும்
வாக்கென்னும் மாலை கொண்டுன்னை என்மனத்து
ஆர்க்கின்றேன் பரவையுண் மண்டளி அம்மானே
(5)
பஞ்சேரும் மெல்லடியாளை ஒர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேலென் பரவையுண் மண்டளி அம்மானே
(6)
அம்மானே, ஆகம சீலர்க்கருள் நல்கும்
பெம்மானே, பேரருளாளன், பிடவூரன்
தம்மானே, தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர்
அம்மானே, பரவையுண் மண்டளி அம்மானே
(7)
விண்தானே மேலையார் மேலையார் மேலாய
எண்தானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாம்முன்
கண்டானே கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண் மண்டளி அம்மானே
(8)
காற்றானே கார்முகில் போல்வதொர் கண்டத்தெம்
கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகமாய்
நீற்றானே, நீள்சடை மேல்நிறை உள்ளதோர்
ஆற்றானே, பரவையுண் மண்டளி அம்மானே
(9)
செடியேன்நான், செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான், கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன்நான், கூறுமாறுன் பணி கூறாத
அடியேன்நான், பரவையுண் மண்டளி அம்மானே
(10)
கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...