(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
பாடல்மறை, சூடல்மதி, பல்வளையொர் பாகம், மதில் மூன்றொர் கணையால்
கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல்கூட்டு பொழில்சூழ் பழைசையுள்
மாட மழபாடியுறை பட்டிசரம் மேய கடிகட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டி வினை வீடுமவரே
(2)
நீரின்மலி புன்சடையர், நீளரவு கச்சையது, நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தி, உடை கோவணமும், மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார் கடவுள் காதல் செய்து மேய நகர்தான்
பாரின்மலி சீர் பழைசை பட்டிசரம் ஏத்தவினை பற்றழியுமே
(3)
காலை மடவார்கள் புனலாடுவது கௌவை கடியார் மறுகெலாம்
மாலை மணநாறு பழையாறை மழபாடி அழகாய மலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பன் உறை பட்டிசரமே பரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி விண்ணுலகம் ஆளுமவரே
(4)
கண்ணின்மிசை நண்ணி இழிவிப்ப, முகமேத்து கமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட, ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரின் மழபாடிமலி பட்டிசரமே மருவுவார்
விண்ணின்மிசை வாழும் இமையோரொடு உடனாதலது மேவல் எளிதே
(5)
மருவ முழவதிர மழபாடி மலிமத்த விழவார்க்க வரையார்
பருவமழை பண்கவர் செய் பட்டிசர மேய படர்புன் சடையினான்
வெருவமத யானையுரி போர்த்து, உமையை அஞ்சவரு வெள்விடையினான்
உருவம்எரி, கழல்கள் தொழ உள்ளம்உடையாரை அடையா வினைகளே
(6)
மறையினொலி கீதமொடு, பாடுவன பூதம்அடி மருவி விரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசர மேய, பனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையினிடை ஏற்றபுனல் தோற்ற நிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர் மிகவே
(7)
பிறவிபிணி மூப்பினொடு நீங்கி இமையோர்உலகு பேணலுறுவார்
துறவியெனும் உள்ளம்உடையார்கள் கொடிவீதி அழகாய தொகுசீர்
இறைவனுறை பட்டிசரம் ஏத்தியெழுவார்கள் வினை ஏதுமிலவாய்
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே
(8)
நேசமிகு தோள்வலவன் ஆகிஇறைவன் மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டி, வரையுற்றதுணராத நிரம்பா மதியினான்
ஈசனுறை பட்டிசரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதுமிலவாய்
நாசமற வேண்டுதலின் அண்ணல்எளிதாம் அமரர் விண்ணுலகமே
(9)
தூய மலரானும் நெடியானும் அறியார்அவன தோற்றநிலையின்
ஏயவகை ஆனதனை ஆரதறிவார், அணிகொள் மார்பினகலம்
பாயநல நீறதணிவான், உமைதனோடும் உறை பட்டிசரமே
மேயவனது ஈரடியும்ஏத்த எளிதாகு நல மேலுலகமே
(10)
தடுக்கினை இடுக்கி மடவார்களிடு பிண்டமது உண்டுழல்தரும்
கடுப்பொடி உடல் கவசர் கத்துமொழி காதல்செய்திடாது, கமழ்சேர்
மடைக்கயல் வயல்கொள் மழபாடிநகர் நீடு பழையாறை அதனுள்
படைக்கொரு கரத்தன் மிகு பட்டிசரம் ஏத்தவினை பற்றறுதலே
(11)
மந்தமலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர மேய படர் புன்சடையனை
அந்தண் மறையோர் இனிதுவாழ் புகலி ஞானசம்பந்தன் அணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர் வினை நிற்பதிலவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...