நாலூர்மயானம்

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூரும் செஞ்சடையான், வெண்ணூல் சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான் தன் அடிநினைந்து
மாலூரும் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே
(2)
சூடும் பிறைச்சென்னிச், சூழ்காடு இடமாக
ஆடும் பறை சங்கொலியோடழகாக
நாடும் சிறப்போவா நாலூர் மயானத்தைப்
பாடும் சிறப்போர்பால் பற்றாவாம் பாவமே
(3)
கல்லால்நீழல் மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்று
எல்லா அறனுரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்
சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல்நெறிக்கே
(4)
கோலத்தார் கொன்றையான், கொல்புலித்தோல் ஆடையான்
நீலத்தார் கண்டத்தான், நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார் பால் சூழாவாம் தொல்வினையே
(5)
கறையார் மணிமிடற்றான், காபாலி, கட்டங்கன்
பிறையார் வளர்சடையான், பெண்பாகன், நண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
இறையான் என்றேத்துவார்க்கு எய்துமாம் இன்பமே
(6)
கண்ணார் நுதலான் கனலாடு இடமாகப்
பண்ணார் மறைபாடி ஆடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்னெறியே
(7)
கண்பாவு வேகத்தால் காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான், நாகத்தோல் ஆகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே
(8)
பத்துத் தலையோனைப் பாதத்தொருவிரலால்
வைத்து மலைஅடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தினொலி ஓவா நாலூர் மயானத்தென்
அத்தன்அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே
(9)
மாலோடு நான்முகனும் நேட வளர்எரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான், வேதங்கள்
நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே
(10)
துன்பாய மாசார், துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பால் சிவாயஎனா நாலூர் மயானத்தே
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கின்பமே
(11)
ஞாலம் புகழ்காழி ஞானசம்பந்தன் தான்
நாலு மறையோதும் நாலூர் மயானத்தைச்
சீலம் புகழால் சிறந்தேத்த வல்லாருக்கு
ஏலும் புகழ், வானத்து இன்பாய் இருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page