தென் திருமுல்லைவாயில்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன், நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன் எங்கள் அரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்
தெளிமண்டி உண்டு, சிறைவண்டு பாடு திருமுல்லைவாயில் இதுவே
(2)
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன், அயனைப் படைத்த பரமன்
அரவத்தொடங்கம் அவைகட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவையோத மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழுமுத்தலைக் கொள் திருமுல்லைவாயில் இதுவே
(3)
வாராத நாடன், வருவார்தம் வில்லின் உருமெல்கி, நாளும் உருகில்
ஆராத இன்பன், அகலாத அன்பன் அருள்மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பில் அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு திருமுல்லைவாயில் இதுவே
(4)
ஒன்றொன்றொடு ஒன்றும், ஒருநான்கொடுஐந்தும், இருமூன்றொடுஏழும் உடனாய்
அன்றின்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர்
குன்றொன்றொடு ஒன்று, குலைஒன்றொடு ஒன்று, கொடிஒன்றொடு ஒன்று குழுமிச்
சென்றொன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திருமுல்லைவாயில் இதுவே
(5)
கொம்பன்ன மின்னின் இடையாளொர் கூறன், விடை நாளும்ஏறு குழகன்
நம்பன், எம் அன்பன், மறைநாவன், வானின் மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன ஒண்கண்அவர் ஆடரங்கின் அணி கோபுரங்கள் அழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே
(6)
ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட ஒருவன்
ஆனேறதேறி அழகேறு நீறன், அரவேறு பூணும் அரனூர்
மானேறு கொல்லை, மயிலேறி வந்து, குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறியாடு திருமுல்லைவாயில் இதுவே
(7)
நெஞ்சார நீடு, நினைவாரை மூடு, வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி, அரவாடு கையன், அனலாடு மேனி அரனூர்
மஞ்சாரு மாட, மனைதோறும் ஐயம், உளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின், வளர்சோறளிக் கொள் திருமுல்லைவாயில் இதுவே
(8)
வரை வந்தெடுத்த வலிவாள் அரக்கன் முடிபத்தும் இற்றுநெரிய
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன் எங்கள் அரனூர்
வரைவந்த சந்தொடகிலுந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறி தேறலாடு திருமுல்லைவாயில் இதுவே
(9)
மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானும் உன்னி, அவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லைவாயில் இதுவே
(10)
பனைமல்கு திண்கை மதமா உரித்த பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லைவாயில் இதுவே
(11)
அணிகொண்ட கோதை அவணன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லை வாயில் அதன்மேல்
தணிகொண்ட சிந்தை அவர்காழி ஞான மிகுபந்தன் ஒண் தமிழ்களின்
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page