தில்லை – சம்பந்தர் தேவாரம் (1):

(1)
கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே
(2)
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டெரிஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே
(3)
மையார் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையால் பந்தோச்சும் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகேத்தச்
செய்யான் உறைகோயில் சிற்றம்பலம் தானே
(4)
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந்திறை தாக்கும் பேரம்பலம் தில்லைச்
சிறை வண்டறைஓவாச் சிற்றம்பல மேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே
(5)
செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே
(6)
வரு மாந்தளிர்மேனி மாதோர் பாகமாம்
திருமாம் தில்லையுள் சிற்றம்பல மேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லால் பேணாதுள்ளமே
(7)
அலையார் புனல்சூடி, ஆகத்தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலையானார்களே
(8)
கூர் வாளரக்கன் தன் வலியைக் குறைவித்துச்
சீராலே மல்கு சிற்றமபல மேய
நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோயெல்லாம் தீர்தல் திண்ணமே
(9)
கோணாகணையானும், குளிர் தாமரையானும்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம்பலம் ஏத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே
(10)
பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர்வாழ் தில்லைச் சிற்றம்பல மேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே
(11)
ஞாலத்துயர் காழி ஞான சம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பல மேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page