திருவேற்காடு:

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
ஒள்ளிது உள்ளக் கதிக்காம் இவனொளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார் இவ்வுலகினில்
தெள்ளியார் அவர் தேவரே
(2)
ஆடல்நாகம் அசைத்தளவில்லதோர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ்வுலகினில்
சேடராகிய செல்வரே
(3)
பூதம் பாடப் புறங்காட்டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம்எய்துதல் இல்லையே
(4)
ஆழ்கடலெனக் கங்கை கரந்தவன்
வீழ்சடையினன் வேற்காடு
தாழ்வுடை மனத்தால் பணிந்தேத்திடப்
பாழ்படும் அவர் பாவமே
(5)
காட்டினாலும் அயர்த்திடக் காலனை
வீட்டினான் உறை வேற்காடு
பாட்டினால் பணிந்தேத்திட வல்லவர்
ஓட்டினார் வினை ஒல்லையே
(6)
தோலினால்உடை மேவ வல்லான், சுடர்
வேலினான் உறை வேற்காடு
நூலினால் பணிந்தேத்திட வல்லவர்
மாலினார் வினை மாயுமே
(7)
மல்லன் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே
(8)
மூரல் வெண்மதி சூடு முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வாரமாய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே
(9)
பரக்கினார் படு வெண்தலையில் பலி
விரக்கினான் உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினைமினே
(10)
மாறிலா மலரானொடு மாலவன்
வேறலான் உறை வேற்காடு
ஈறிலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கில்லை குற்றமே
(11)
விண்ட மாம்பொழில் சூழ் திருவேற்காடு
கண்டு நம்பன் கழல் பேணிச்
சண்பை ஞான சம்பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page