திருவேதிகுடி – அப்பர் தேவாரம்:

<– திருவேதிகுடி

(1)
கையது காலெரி நாகம், கனல்விடு சூலமது
வெய்யது, வேலை நஞ்சுண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கமழும் திருவேதிகுடி
ஐயனை ஆராவமுதினை நாமடைந்தாடுதுமே
(2)
கைத்தலை மான்மறி ஏந்திய கையன், கனல் மழுவன்
பொய்த்தலை ஏந்திநற் பூதியணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துகளும் திருவேதிகுடி
அத்தனை ஆராவமுதினை நாமடைந்தாடுதுமே
(3)
முன்பின் முதல்வன், முனிவன், எம் மேலைவினை கழித்தான்
அன்பின் நிலையில் அவுணர்புரம் பொடியான செய்யும்
செம்பொனை, நன்மலர் மேலவன் சேர் திருவேதிகுடி
அன்பனை, நம்மை உடையனை, நாமடைந்தாடுதுமே
(4)
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடமுன் உயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கமழும் திருவேதிகுடி
அத்தனை ஆராவமுதினை நாமடைந்தாடுதுமே
(5)
ஆன்அணைந்தேறும் குறிகுணம் ஆரறிவார், அவர்கை
மான்அணைந்தாடு, மதியும் புனலும் சடைமுடியன்
தேனணைந்தாடிய வண்டு பயில்த் திருவேதிகுடி
ஆனணைந்தாடும் மழுவனை நாமடைந்தாடுதுமே
(6)
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாமொழியப்
பண்ணினிசை மொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான் திருவேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாமடைந்தாடுதுமே
(7)
ஊர்ந்தவிடை உகந்தேறிய செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்பிரான் திருவேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமுதை அடைந்தாடுதுமே
(8)
எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள்
திரியும் பலியினன் தேயமும் நாடுமெல்லாம் உடையான்
விரியும் பொழிலணி சேறுதிகழ் திருவேதிகுடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்தாடுதுமே
(9)
மையணி கண்டன், மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன், விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கமழும் திருவேதிகுடி
ஐயனை ஆராவமுதினை நாமடைந்தாடுதுமே
(10)
வருத்தனை வாளரக்கன் முடி தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப், பொய்யா அருளனைப், பூதப் படையுடைய
திருத்தனைத், தேவர்பிரான் திருவேதிகுடி உடைய
அருத்தனை ஆராவமுதினை நாமடைந்தாடுதுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page