இரும்புதரு மனத்தேனை ஈர்த்(து) ஈர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே, நரிகள்எல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே
(2)
பண்ணார்ந்த மொழிமங்கை பங்கா நின்ஆளானார்க்(கு)
உண்ணார்ந்த ஆரமுதே, உடையானே – அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய், நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவாறன்றே உன் கழல்கண்டே
(3)
ஆதமிலி யான் பிறப்பிறப்பென்னும் அருநரகில்
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு – ஆஆவென்று
ஓதமலி நஞ்சுண்ட உடையானே – அடியேற்குன்
பாதமலர் காட்டியவாறன்றே எம் பரம்பரனே
(4)
பச்சைத்தால் அரவாட்டீ – படர்சடையாய் – பாதமலர்
உச்சத்தார் பெருமானே, அடியேனை உய்யக் !கொண்
டெச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே – அச்சோஎன்
சித்தத்தா(று) உய்ந்தவாறன்றே உன் திறம்நினைந்தே
(5)
கற்றறியேன் கலைஞானம், கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம், வாக்கியலால் வார்கழல் !வந்
துற்(று) இறுமாந்திருந்தேன் – எம்பெருமானே – அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமாறன்றே நின் பொன்னருளே
(6)
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன்எம் பெருமானே – உடையானே – அடியேனை
அஞ்சேல் என்றாண்டவாறன்றே அம்பலத்தமுதே
(7)
என்பாலைப் பிறப்பறுத்திங்கிமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந்துறை உறையுஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி !ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவாறன்றே எம் பெருமானே
(8)
மூத்தானே, மூவாத முதலானே, முடிவில்லா
ஓத்தானே, பொருளானே, உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே, புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவாறன்றேஎம் பெருமானே
(9)
மருவினிய மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந்துள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச் சிவபெருமான் என்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் !படிவாமா
றருள் எனக்கிங்கிடைமருதே இடங்கொண்ட அம்மானே
(10)
நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற்கருள் செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே
