திருவுந்தியார்

<– திருவாசகம்

(1)
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறுந்தீபற

(2)
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற

(3)
தச்சு விடுத்தலும் தாம்அடியிட்டலும்
அச்சு முறிந்ததென்றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற

(4)
உய்யவல்லார் ஒருமூவரைக் காவல் கொண்
டெய்ய வல்லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கன் என்றுந்தீபற

(5)
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீபற
உருத்திர நாதனுக்குந்தீபற

(6)
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவாதிருந்தான் என்றுந்தீபற
சதுர்முகன் தாதை என்றுந்தீபற

(7)
வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்றுந்தீபற
கலங்கிற்று வேள்வி என்றுந்தீபற

(8)
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென்னே ஏடி உந்தீபற
பணைமுலை பாகனுக்குந்தீபற

(9)
புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற
வானவர்கோன் என்றே உந்தீபற

(10)
வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சினவா பாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற

(11)
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டியவா பாடி உந்தீபற
கொங்கை குலுங்க நின்றுந்தீபற

(12)
உண்ணப் புகுந்த பகன்ஒளித்தோடாமே
கண்ணைப் பறித்தவாறுந்தீபற
கருக்கெட நாமெலாம் உந்தீபற

(13)
நாமகள்நாசி, சிரம் பிரமன் படச்
சோமன் முகம் நெரித்துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற

(14)
நான்மறையோனும் அகத்(து) இயமான்படப்
போம்வழி தேடுமாறுந்தீபற
புரந்தரன் வேள்வியில் உந்தீபற

(15)
சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவாறுந்தீபற
மயங்கிற்று வேள்வி என்றுந்தீபற

(16)
தக்கனார் அன்றே தலையிழந்தார் தக்கன்
மக்களைச் சூழ நின்றுந்தீபற
மடிந்தது வேள்வி என்றுந்தீபற

(17)
பாலகனார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற

(18)
நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்ததென்றுந்தீபற
உகிரால் அரிந்ததென்றுந்தீபற

(19)
தேரை நிறுத்தி மலையெடுத்தான் சிரம்
ஈரைந்தும் இற்றவாறுந்தீபற
இருபதும் இற்றதென்றுந்தீபற

(20)
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவல் என்றுந்தீபற
அதற்கப்பாலுங் காவல் என்றுந்தீபற

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page