(திருவாரூரில் பாடிய பொதுத் திருப்பதிகம்)
(1)
பாறு தாங்கிய காடரோ, படு
தலையரோ, மலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழகரோ, குழைக்
காதரோ, குறுங்கோட்டிள
ஏறு தாங்கிய கொடியரோ, சுடு
பொடியரோ, இலங்கும் பிறை
ஆறு தாங்கிய சடையரோ, நமக்கு
அடிகளாகிய அடிகளே
(2)
இட்டிதாக வந்துரைமினோ, நுமக்கு
இசையுமா நினைந்தேத்துவீர்
கட்டி வாழ்வது நாகமோ, சடை
மேலும் நாறு கரந்தையோ
பட்டி ஏறுகந்தேறரோ, படு
வெண்தலைப் பலி கொண்டுவந்து
அட்டி ஆளவும் கிற்பரோ, நமக்கு
அடிகளாகிய அடிகளே
(3)
ஒன்றினீர்கள் வந்துரைமினோ, நுமக்கு
இசையுமா நினைந்தேத்துவீர்
குன்றி போல்வதோர் உருவரோ, !குறிப்
பாகி நீறுகொண்டணிவரோ
இன்றியே இலர்ஆவரோ, அன்றி
உடையராய் இலர்ஆவரோ
அன்றியே மிக அறவரோ, நமக்கு
அடிகளாகிய அடிகளே
(4)
தேனைஆடு முக்கண்ணரோ, மிகச்
செய்யரோ, வெள்ளை நீற்றரோ
பால்நெய் ஆடலும் பயில்வரோ, தமைப்
பற்றினார்கட்கு நல்லரோ
மானை மேவிய கண்ணினாள் மலை
மங்கை நங்கையை அஞ்சவோர்
ஆனை ஈருரி போர்ப்பரோ, நமக்கு
அடிகளாகிய அடிகளே
(5)
கோணல் மாமதி சூடரோ, கொடு
கொட்டி காலொர் கழலரோ
வீணை தான் அவர் கருவியோ, !விடை
யேறு வேத முதல்வரோ
நாணதாகஓர் நாகம் கொண்டு அரைக்கு
ஆர்ப்பரோ, நலமார் தர
ஆணையாக நம் அடிகளோ, நமக்கு
அடிகளாகிய அடிகளே
(6)
வந்து சொல்லுமின் மூடனேனுக்கு
வல்லவா நினைந்தேத்துவீர்
வந்த சாயினை அறிவரோ, தம்மை
வாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியால்உரை கொள்வரோ, அன்றிப்
பொய்யின் மெய்யுரைத்தாள்வரோ
அன்றியே மிக அறிவரோ, நமக்கு
அடிகளாகிய அடிகளே
(7)
மெய்யென் சொல்லுமின் நமரங்காள், நுமக்கு
இசையுமா நினைந்தேத்துவீர்
கையில் சூலமது உடையரோ, கரி
காடரோ, கறைக் கண்டரோ
வெய்ய பாம்பரை ஆர்ப்பரோ, !விடை
யேறரோ, கடைதோறும் சென்று
ஐயம் கொள்ளும் அவ்வடிகளோ நமக்கு
அடிகளாகிய அடிகளே
(8)
நீடு வாழ்பதி உடையரோ, அயன்
நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடுவாரையும் உடையரோ, தமைப்
பற்றினார்கட்கு நல்லரோ
காடு தான் அரங்காகவே கைகள்
எட்டினோடு இலயம்பட
ஆடுவார் எனப் படுவரோ, நமக்கு
அடிகளாகிய அடிகளே
(9)
நமண நந்தியும், கரும வீரனும்
தரும சேனனும் என்றிவர்
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
தங்கள் கூறையொன்றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோணம் என்று
ஓதி யாரையும் நாணிலா
அமணரால் பழிப்புடையரோ, நமக்கு
அடிகளாகிய அடிகளே
(10)
படிசெய் நீர்மையில் பத்தர்காள், !பணிந்
தேத்தினேன் பணியீர், அருள்
வடிவிலான் திருநாவலூரன்
வனப்பகை அப்பன், வன்தொண்டன்
செடியனாகிலும் தீயனாகிலும்
தம்மையே மனம் சிந்திக்கும்
அடியன் ஊரனை ஆள்வரோ, நமக்கு
அடிகளாகிய அடிகளே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...