(1)
பாடலன் நான்மறையன், படிபட்ட கோலத்தன், திங்கள்
சூடலன், மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரி கொண்டு, எல்லி
ஆடலன், ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே
(2)
சோலையில் வண்டினங்கள் சுரும்போடு இசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய் தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும் போய்ப் பணிதல் கருமமே
(3)
உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர், மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின், கரவாது இருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேல் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே
(4)
வெந்துறு வெண்மழுவாள் படையான், மணிமிடற்றான், அரையின்
ஐந்தலை ஆடரவம் அசைத்தான், அணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம்
நைந்தறும், வந்தணையும் நாள்தொறும் நல்லனவே
(5)
வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல், வெய்ய
காடிடமாக நின்று கனலேந்திக் கைவீசி
ஆடும் அவிர்சடையான், அவன்மேய ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே
(6)
கங்கையோர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான், மறையான், மழுவேந்தும்
அங்கையினான் அடியே பரவி, அவன் மேய ஆரூர்
தங்கையினால் தொழுவார் தடுமாற்றறுப்பாரே
(7)
நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி, நீண்ட
ஆறணி வார்சடையான், ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான் அவன்எம் பெருமானே
(8)
…
(9)
வல்லியம் தோலுடையான், வளர்திங்கள் கண்ணியினான், வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலை இன்னற ஏற்றான்
அல்லியம் கோதை தன்னை ஆகத்தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே
(10)
செந்துவர் ஆடையினார், உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும் அரணம் எரியூட்டி ஆரூர்த்
தந்திரமா உடையான் அவனென் தலைமையனே
(11)
நல்ல புனற்புகலித் தமிழ் ஞானசம்பந்தன், நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லதோர் இச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...