(1)
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவமான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ
மான்மறி கையேந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
(2)
மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
வானவரை வலியமுதம் ஊட்டி அந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல் நஞ்சுண்ட நாளோ
அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையால் முப்புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
(3)
பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவையாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே
(4)
ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமாலோடு
நில்லாஎம் பெருமானே என்றங்கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளர்ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே
(5)
பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே
பணிவார்கட்காங்கங்கே பற்றானானே
நீலமா மணிகண்டத்தெண் தோளானே
நெருநலையாய் இன்றாகி நாளையாகும்
சீலமே சிவலோக நெறியேயாகும்
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
குளிர்ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே
(6)
திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து
மாமுனிவர்க்கருள் செய்தங்கிருந்த நாளோ
பிறங்கியசீர்ப் பிரமன்தன் தலைகை ஏந்திப்
பிச்சையேற்று உண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே
(7)
நிலந்தரத்து நீண்டுருவமான நாளோ
நிற்பனவும் நடப்பனவும் நீயேஆகிக்
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
காரணத்தால் நாரணனைக் கற்பித்தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
வாசுகியை வாய்மடுத்து வானோர்உய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே
(8)
பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப்
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க்கென்றும்
கேடிலா வானுலகம் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க்கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
(9)
புகையெட்டும் போக்கெட்டும் புலன்களெட்டும்
பூதலங்கள் அவையெட்டும் பொழில்கள் எட்டும்
கலையெட்டும் காப்பெட்டும் காட்சியெட்டும்
கழற்சேவடி அடைந்தார் களைகண் எட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை எட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
(10)
ஈசனாய் உலகேழும் மலையுமாகி
இராவணனை ஈடழித்திட்டிருந்த நாளோ
வாசமலர் மகிழ் தென்றலான நாளோ
மதயானை உரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
சகரர்களை மறித்திட்டாட்கொண்ட நாளோ
தேசம்உமை அறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...