திருவாட்போக்கி

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பாலகர் விருத்தர் பழையார் எனார்
ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலமார்ந்தவர் செம்மையுள் நிற்பரே
(2)
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
எடுத்தும் ஏத்தியும் இன்புறுமின்களே
(3)
வந்திவ்வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தியோடி நரகத்திடா முனம்
அந்தியின் ஒளிதாங்கும் வாட்போக்கியார்
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே
(4)
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து தெளிவுறலாகுமே
ஆற்றவும் அருள்செய்யும் வாட்போக்கிபால்
ஏற்றுமின் விளக்கை இருள் நீங்கவே
(5)
மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்கு
ஊறி ஊறி உருகுமென் உள்ளமே
(6)
கானம்ஓடிக் கடிதெழு தூதுவர்
தானமோடு தலை பிடியா முனம்
ஆனஞ்சாடி உகந்த வாட்போக்கியார்
ஊனமில் அவர்க்கு உண்மையில் நிற்பரே
(7)
பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர்
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே
(8)
நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை
வாடிஏத்த நம் வாட்டம் தவிருமே
(9)
கட்டறுத்துக் கடிதெழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே
அட்ட மாமலர் சூடும் வாட்போக்கியார்க்கு
இட்டமாகி இணையடி ஏத்துமே
(10)
இரக்க முன் அறியாதெழு தூதுவர்
பரக்கழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்கனுக்கருள் செய்த வாட்போக்கியார்
கரப்பதும் கரப்பார்அவர் தங்கட்கே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page