திருவக்கரை:

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
கறையணி மாமிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்
பிறையணி கொன்றையினார், ஒரு பாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன்தன் தலையில் பலி கொள்பவன், வக்கரையில்
உறைபவன் எங்கள் பிரான் ஒலியார் கழல் உள்குதுமே
(2)
பாய்ந்தவன் காலனைமுன், பணைத் தோளியொர் பாகமதா
ஏய்ந்தவன், எண்ணிறந்த இமையோர்கள் தொழுதிறைஞ்ச
ஆய்ந்தவன், முப்புரங்கள் எரி செய்தவன், வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடையான் அடி செப்புதுமே
(3)
சந்திர சேகரனே அருளாய் என்று தண்விசும்பில்
இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலாய் விழவோர் அம்பினால்
மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே
(4)
நெய்யணி சூலமொடு நிறை வெண்மழுவும் அரவும்
கையணி கொள்கையினான், கனல் மேவிய ஆடலினான்
மெய்யணி வெண்பொடியான், விரி கோவண ஆடையின்மேல்
மையணி மாமிடற்றான் உறையும் இடம் வக்கரையே
(5)
ஏனவெண் கொம்பினொடும், இள ஆமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையும், குளிர் மத்தமும் சூடிநல்ல
மானன மென் விழியாளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரி செய்த தலைமகனே
(6)
கார்மலி கொன்றையொடும், கதிர் மத்தமும் வாளரவும்
நீர்மலியும் சடைமேல் நிரம்பா மதி சூடி, நல்ல
வார்மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன்
பார்மலி வெண்தலையில் பலி கொண்டுழல் பான்மையனே
(7)
கானணவும் மறிமான் ஒரு கையதோர் கைமழுவாள்
தேனணவும் குழலாள் உமைசேர் திருமேனியனான்
வானணவும் பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்
ஊனணவும் தலையில் பலி கொண்டுழல் உத்தமனே
(8)
இலங்கையர் மன்னனாகி எழில் பெற்ற இராவணனைக்
கலங்கவொர் கால்விரலால் கதிர் பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனாய் அருள் பெற்றலும் நன்களித்த
வலங்கெழு மூவிலை வேலுடையான் இடம் வக்கரையே
(9)
காமனை ஈடழித்திட்டவன், காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றெனக்கென்றருள் செய்தவன், தேவர் பிரான்
சாமவெண் தாமரைமேல் அயனும் தரணியளந்த
வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே
(10)
மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர் என்றிவர்கள்
தேடிய தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான்
பாடிய நான்மறையன், பலிக்கென்று பல்வீதி தொறும்
வாடிய வெண்தலை கொண்டுழல்வான் இடம் வக்கரையே
(11)
தண்புனலும் அரவும் சடைமேல் உடையான், பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன்உறை வக்கரையைச்
சண்பையர் தம்தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண்புனை பாடல்வல்லார் அவர்தம் வினை பற்றறுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page