திருமுண்டீச்சரம்:

<– நடு நாடு

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
    அடியவர்கட்கு அன்பன் காண், ஆனைத் தோலைப்
போர்த்தான் காண், புரிசடைமேல் புனலேற்றான் காண்
    புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்
காத்தான் காண், உலகேழும் கலங்கா வண்ணம்
    கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத்துள்ளே
சேர்த்தான் காண், திருமுண்டீச்சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே
(2)
கருத்தன் காண், கமலத்தோன் தலையில் ஒன்றைக்
    காய்ந்தான் காண், பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன் காண், உமையவளோர் பாகத்தான் காண்
    ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன் காண், விண்ணவர்க்கும் மேலானான் காண்
    மெய்யடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண், திருமுண்டீச்சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே
(3)
நம்பன் காண், நரைவிடை ஒன்றேறினான் காண்
    நாதன் காண், கீதத்தை நவிற்றினான் காண்
இன்பன் காண், இமையா முக்கண்ணினான் காண்
    ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்கு
அன்பன் காண், ஆரழலதாடினான் காண்
    அவனிவன் என்று யாவர்க்கும் அறியவொண்ணாச்
செம்பொன் காண், திருமுண்டீச்சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே
(4)
மூவன் காண், மூவர்க்கும் முதலானான் காண்
    முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவானான் காண்
காவன் காண், உலகுக்கோர் கண்ணானான் காண்
    கங்காளன் காண், கயிலை மலையினான் காண்
ஆவன் காண், ஆவகத்தஞ்சாடினான் காண்
    ஆரழலாய் அயற்கரிக்கும் அறியவொண்ணாத்
தேவன் காண், திருமுண்டீச்சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே
(5)
கானவன் காண், கானவனாய்ப் பொருதான் தான் காண்
    கனலாட வல்லான் காண், கையிலேந்தும்
மானவன் காண், மறைநான்கும் ஆயினான் காண்
    வல்லேறொன்றதேற வல்லான் தான் காண்
ஊனவன் காண், உலகத்துக்குயிரானான் காண்
    உரையவன் காண், உணர்வவன் காண், உணர்ந்தார்க்கென்றும்
தேனவன் காண், திருமுண்டீச்சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே
(6)
உற்றவன் காண், உறவெல்லாம் ஆவான் தான் காண்
    ஒழிவற நின்றெங்கும் உலப்பிலான் காண்
புற்றரவே ஆடையுமாய்ப் பூணுமாகிப்
    புறங்காட்டில் எரியாடல் புரிந்தான் தான் காண்
நற்றவன் காண், அடியடைந்த மாணிக்காக
    நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவடியினால்
செற்றவன் காண், திருமுண்டீச்சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே
(7)
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி
    உருண்டோடத், தொடர்ந்து அருக்கன் பல்லையெல்லாம்
தகர்த்தவன் காண், தக்கன்தன் தலையைச் செற்ற
    தலைவன் காண், மலைமகளாம் உமையைச் சால
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி
    வந்து அவியுண்டவரோடும் அதனையெல்லாம்
சிதைத்தவன் காண், திருமுண்டீச்சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே
(8)
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி
    உழிதரும் அவ்வூமரவர் உணரா வண்ணம்
பரிந்தவன் காண், பனிவரை மீப்பண்டம் எல்லாம்
    பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
நிரைந்துவரும் இருகரையும் தடவாஓடி
    நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்
திரிந்துலவு திருமுண்டீச்சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே
(9)
(10)
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லலெல்லாம்
    அரும்பொருளாய் நின்றவன் காண், அனங்கன்ஆகம்
மறுத்தவன் காண், மலை தன்னை மதியாதோடி
    மலைமகள்தன் மனம்நடுங்க வானோர்அஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாயம் எடுத்தோன் கையும்
    கதிர்முடியும் கண்ணும் பிதுங்கியோடச்
செறுத்தவன் காண், திருமுண்டீச்சரத்து மேய
    சிவலோகன் காண் அவனென் சிந்தையானே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page