திருமாற்பேறு – அப்பர் தேவாரம் (4):

<– திருமாற்பேறு

(1)
ஏதுமொன்றும் அறிவிலராயினும்
ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்குப்
பேதமின்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே
(2)
அச்சமில்லை நெஞ்சே அரன் நாமங்கள்
நிச்சலும் நினையாய் வினை போயறக்
கச்சமா விடமுண்ட கண்டா என
வைச்ச மாநிதிஆவர் மாற்பேறரே
(3)
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்
பாத்திரம் சிவமென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே
(4)
இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்
அருந்தவம் தரும் அஞ்செழுத்தோதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்தும் ஆகுவர் மன்னு மாற்பேறரே
(5)
சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்
கூற்றை நீக்கிக் குறைவறுத்தாள்வதோர்
மாற்றிலாச் செம்பொனாவர் மாற்பேறரே
(6)
ஈட்டும் மாநிதி சால இழக்கினும்
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்
காட்டில் மாநடமாடுவாய், காவெனில்
வாட்டம் தீர்க்கவும் வல்லர் மாற்பேறரே
(7)
ஐயனே அரனே என்று அரற்றினால்
உய்யலாம் உலகத்தவர், பேணுவர்
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே
(8)
(9)
(10)
உந்திச் சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாளிற ஊன்றினான்
மந்தி பாய்பொழில் சூழு மாற்பேறென
அந்தம் இல்லதோர் இன்பம் அணுகுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page