திருமறைக்காடு – சுந்தரர் தேவாரம்:

<– திருமறைக்காடு

(1)
யாழைப் பழித்தன்ன மொழிமங்கை ஒரு பங்கன்
பேழைச்சடை முடிமேல் பிறைவைத்தான் இடம் பேணில்
தாழைப் பொழிலூடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக் குரங்குண்ணும் மறைக்காடே
(2)
சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான் இடம் தெரியில்
முகரத்திடை முத்தின் ஒளி பவளத்திரள் ஓதத்
தகரத்திடை தாழைத்திரள் ஞாழல்திரள் நீழல்
மகரத்தொடு சுறவங் கொணர்ந்தெற்றும் மறைக்காடே
(3)
அங்கங்களும் மறைநான்குடன் விரித்தான்இடம் அறிந்தோம்
தெங்கங்களுந் நெடும் பெண்ணையும் பழம்வீழ் மணல் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும் மறைக்காடே
(4)
நரைவிரவிய மயிர் தன்னொடு பஞ்சவ்வடி மார்பன்
உரைவிரவிய உத்தமன் இடம் உணரல்உறு மனமே
குரைவிரவிய குலைசேகரக் கொண்டல்தலை விண்ட
வரை புரைவன திரை பொருதிழிந்தெற்றும் மறைக்காடே
(5)
சங்கைப்பட நினையாதெழு நெஞ்சே தொழுதேத்தக்
கங்கைச்சடை முடியுடையவற்கிடமாவது, பரவை
அங்கைக்கடல் அருமாமணி உந்திக் கரைக்கேற்ற
வங்கத்தொடு சுறவங் கொணர்ந்தெற்றும் மறைக்காடே
(6)
அடல்விடையினன், மழுவாளினன், நல்லார் அணிகொன்றைப்
படருஞ்சடை முடியுடையவற்கிடமாவது, பரவைக்
கடலிடையிடை கழியருகினில் கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு மணிநீர் மறைக்காடே
(7)
முளை வளரிள மதியுடையவன், முன்செய்த வல்வினைகள்
களை களைந்தெனை ஆளல்உறு கண்டன் இடம், செந்நெல்
வளைவிளைவயல் கயல்பாய்தரு குணவார்மணல் கடல்வாய்
வளைவளையொடு சலஞ்சலங் கொணர்ந்தெற்றும் மறைக்காடே
(8)
நலம்பெரியன சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம்
கலம்பெரியன சாருங்கடல் கரைபொருதிழி கங்கைச்
சலம்புரிசடை முடியுடையவற்கிடமாவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலங் கொணர்ந்தெற்றும் மறைக்காடே
(9)
குண்டாடியும் சமணாடியும்  குற்றுடுக்கையர் தாமும்
கண்டார்கண்ட காரணம்அவை கருதாது கைதொழுமின்
எண்தோளினன், முக்கண்ணினன், ஏழிசையினன், அறுகால்
வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு மணிநீர் மறைக்காடே
(10)
பாரூர்பல புடைசூழ்வள வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை பங்கன் மறைக்காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்அடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர் புகழாகுவர் தாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page