திருமறைக்காடு – சம்பந்தர் தேவாரம் (5):

<– திருமறைக்காடு

(1)
சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடு!திவி
தலம் மலி சுரர்அசுரர்கள் ஒலி சலசல கடல்கடை உழிமிகு
கொலைமலி விடமெழ, அவருடல் குலைதர அது நுகர்பவன், எழில்
மலை மலிமதில் புடைதழுவிய மறைவனம் அமர்தரு பரமனே
(2)
கரமுதலிய அவயவம்அவை கடுஇடர் அரவது கொடுவரு
வரன்முறை அணிதரும் அவன்அடல் வலிமிகு புலியதள் உடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை இமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே
(3)
இழைவளர் தருமுலை மலைமகள் இனிதுறை தரும்எழில் உருவினன்
முழையினில் மிகுதுயில் உறும்அரி முசிவொடும் எழ, முளரியொடெழு
கழைநுகர் தருகரி இரிதரு கயிலையின் மலிபவன், இருளுறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே
(4)
நலமிகு திருஇதழியின்மலர், நகுதலையொடு கனகியின் முகை
பலசுர நதிபட அரவொடு மதிபொதி சடைமுடியினன்,  மிகு
தல நிலவிய மனிதர்களொடு தவமுயல் தரு முனிவர்கள்தம்
மலமறு வகைமன நினைதரும் இறைவன் அமர்தரு பரமனே
(5)
கதிமலி களிறது பிளிறிட உரிசெய்த அதிகுணன், உயர்பசு
பதிஅதன் மிசைவரு பசுபதி, பலகலை அவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி அமர்முனி கணனொடு மிகுதவம் முயல்தரும்
அதிநிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே
(6)
கறைமலி திரிசிகை, படையடல், கனல்மழு, எழுதர வெறிமறி
முறைமுறை ஒலி தமருகம், முடைதலை, முகிழ்மலி கணி, வடமுகம்
உறைதரு கரன், உலகினில் உயரொளி பெறுவகை நினைவொடு, மலர்
மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே
(7)
இருநிலன் அதுபுனலிடை மடிதர, எரிபுக, ஏரியதுமிகு
பெருவெளியினில் அவி தர, வளி கெட, வியனிடை முழுவதுகெட
இருவர்கல் உடல் பொறையொடு திரி எழிலுரு உடையவன், இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே
(8)
சனம் வெருவுற வரு தசமுகன், ஒருபது முடியொடும் இருபது
கன மருவிய புயநெரி வகை கழலடியிலொர் விரல் நிறுவினன்
இனமலி கண நிசிசரன் மகிழ்வுற அருள்செய்த கருணையன்என
மனமகிழ்வொடு மறைமுறைஉணர் மறைவனம் அமர்தரு பரமனே
(9)
அணிமலர் மகள் தலைமகன் அயன் அறிவரியதொர் பரிசினில்,எரி
திணிதரு திரள்உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதிசெய்து
பணியுற, வெளியுருவிய பரனவன், நுரைமலி கடள் திரளெழும்
மணிவளர் ஒளிவெயில் மிகுதரு மறைவனம் அமர்தரு பரமனே
(10)
இயல்வழிதர, விது செலவுற, இனமயில் இறகுறு தழையொடு
செயல் மருவிய சிறு கடம் முடிஅடை கையர், தலைபறி செய்துதவம்
முயல்பவர், துவர்படம் உடல் பொதிபவர், அறிவரு பரனவன் அணி
வயலினில் வளைவள மருவிய மறைவனம் அமர்தரு பரமனே
(11)
வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகர்இறை தமிழ்விரகனதுரை இயல்வல
இசைமலி தமிழ் ஒருபதும் வலஅவர் உலகினில் எழில் பெறுவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page