(1)
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரைதவழ் முத்தம்
கங்குலார் இருள் போழும் கலி மறைக்காடமர்ந்தார் தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்
எங்கும் எங்கள் பிரானார் புகழலது இகழ்பழியிலரே
(2)
கூனிளம் பிறைசூடிக், கொடுவரித் தோலுடை ஆடை
ஆனிலங்கிளர் ஐந்தும்ஆடுவர், பூண்பதும் அரவம்
கானலங்கழி ஓதம் கரையொடு கதிர்மணி ததும்பத்
தேனலங்கமழ் சோலைத் திருமறைக்காடமர்ந்தாரே
(3)
நுண்ணிதாய் வெளிதாகி, நூல்கிடந்திலங்கு பொன் மார்பில்
பண்ணி யாழென முரலும் பணிமொழி உமையொரு பாகன்
தண்ணிதாய வெள்ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார் கலி மறைக்காடமர்ந்தாரே
(4)
ஏழை வெண்குரு கயலே, இளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடல் புல்கும் தண்மறைக்காடமர்ந்தார் தாம்
மாழை அங்கயல் ஒண்கண் மலைமகள் கணவனது அடியின்
நீழலே சரணாக நினைபவர் வினை நலிவிலரே
(5)
அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ, நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான்
மரவ நீடுயர் சோலை மழலைவண்டு யாழ்செயும் மறைக்காட்டு
இரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெனலாமே
(6)
பல்லிலோடு கையேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது, அறிவர்எம் அடிகள்
புல்லம் ஏறுவர், பூதம் புடைசெல உழிதர்வர்க்கிடமாம்
மல்கு வெண்திரை ஓத மாமறைக்காடது தானே
(7)
நாகம் தான் கயிறாக, நளிர்வரை அதற்கு மத்தாகப்
பாகம் தேவரொடு அசுரர் படுகடல் அளறெழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கும் ஓட
ஆகந்தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே
(8)
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத்தன் திருவிரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டலறப் பரிந்தவன் பதி மறைக்காடே
(9)
விண்ட மாமலரோனும், விளங்கொளி அரவணையானும்
பண்டும் காண்பரிதாய பரிசினன் அவனுறை பதிதான்
கண்டலங்கழி ஓதம் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்டலங்கமழ் சோலை மாமறைக்காடது தானே
(10)
பெரியவாகிய குடையும் பீலியும் அவைவெயில் கரவாக்
கரிய மண்டை கையேந்திக் கல்லென உழிதரும் கழுக்கள்
அரியவாக உண்டோதும் அவர்திறம் ஒழிந்து, நம் அடிகள்
பெரிய சீர்மறைக்காடே பேணுமின் மனமுடையீரே
(11)
மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந்தாரைக்
கையினால் தொழுதெழுவான் காழியுண் ஞானசம்பந்தன்
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய்ப்
பொய்யில் வானவரோடும் புகவலர், கொளவலர் புகழே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...