(1)
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேலுணரா ஆண்மையான் மிக்கான் தன்னைப்
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்ததோள் முடிஅடர்த்துக்
காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே
(2)
முக்கிமுன் வெகுண்டெடுத்த முடியுடை அரக்கர் கோனை
நக்கிருந்தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை
அக்கரவாமை பூண்ட அழகனார் கருத்தினாலே
தெக்குநீர்த் திரைகள் மோதும் திருமறைக்காடனாரே
(3)
மிகப் பெருத்துலாவ மிக்கான் அக்கொரு தேர்கடாவி
அகப்படுத்தென்று தானும் ஆண்மையால் மிக்கரக்கன்
உகைத்தெடுத்தான் மலையை, ஊன்றலும் அவனை ஆங்கே
நகைப்படுத்தருளினான் ஊர் நான்மறைக்காடு தானே
(4)
அந்தரம் தேர்கடாவி ஆரிவனென்று சொல்லி
உந்தினான் மாமலையை, ஊன்றலும் ஒள்ளரக்கன்
பந்தமாம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார் திருமறைக்காடனாரே
(5)
தடுக்கவும் தாங்கவொண்ணாத் தன்வலி உடையனாகிக்
கடுக்கவோர் தேர்கடாவிக் கையிருபதுகளாலும்
எடுப்பனான்என்ன பண்டம் என்றெடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊராம் அணி மறைக்காடு தானே
(6)
நாள்முடிக்கின்ற சீரால் நடுங்கியே மீது போகான்
கோள் பிடித்தார்த்த கையான் கொடியன் மாவலியன்என்று
நீள்முடிச் சடையர் சேரு நீள்வரை எடுக்கலுற்றான்
தோள்முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காட னாரே
(7)
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன் மா வலியனென்று
பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர் கோனைக்
கத்திவாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார்
முத்துவாய் திரைகள் மோது முதுமறைக்காடனாரே
(8)
பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதியனாகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமாறறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்தவாறே
நக்கன பூதமெல்லாம் நான்மறைக் காடனாரே
(9)
நாணஞ்சு கையனாகி நன்முடி பத்தினோடு
பாணஞ்சு முன்னிழந்து பாங்கிலா மதியனாகி
நீணஞ்சு தானுணரா நின்றெடுத்தானை அன்று
ஏணஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காட னாரே
(10)
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர் கடாவிச் சென்றெடுத்தான் மலையை
முன்கைமா நரம்புவெட்டி முன்னிருக்கிசைகள் பாட
அங்கைவாள் அருளினான்ஊர் அணி மறைக்காடு தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...