(1)
ஓத மால்கடல் பாவி உலகெலாம்
மாதரார் வலங்கொள் மறைக்காடரைக்
காதல் செய்து கருதப்படும் அவர்
பாதமேத்தப் பறையும்நம் பாவமே
(2)
பூக்கும் தாழை புறணி அருகெலாம்
ஆக்கம் தானுடை மாமறைக்காடரோ
ஆர்க்கும் காண்பரியீர் அடியார் தம்மை
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே
(3)
புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னினார் வலங்கொள் மறைக்காடரோ
அன்னமெல் நடையாளை ஓர் பாகமாச்
சின்ன வேடம் உகப்பது செல்வமே
(4)
அட்ட மாமலர் சூடி அடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்டமாடியும் நான்மறை பாடியும்
இட்டமாக இருக்கும் இடமிதே
(5)
நெய்தலாம் பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யினார் வலங்கொள் மறைக்காடரோ
தையல் பாகம் கொண்டீர், கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே
(6)
துஞ்சும் போதும் துயிலின்றி ஏத்துவார்
வஞ்சின்றி வலங்கொள் மறைக்காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்து
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே
(7)
திருவினார் செல்வ மல்கு விழாவணி
மருவினார் வலங்கொள் மறைக்காடரோ
உருவினாள் உமைமங்கையொர் பாகமாய்
மருவினாய் கங்கையைச் சென்னி தன்னிலே
(8)
சங்கு வந்தலைக்கும் தடம் கானல்வாய்
வங்கமார் வலங்கொள் மறைக்காடரோ
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே
அங்கையில் அனலேந்த அழகிதே
(9)
…
(10)
குறைக்காட்டான் விட்ட தேர் குத்த மாமலை
இறைக்காட்டி எடுத்தான் தலை ஈரைந்தும்
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக்காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...