திருமங்கலக்குடி – சம்பந்தர் தேவாரம்:

<-- திருமங்கலக்குடி

(1)
சீரினார் மணியும் அகில் சந்தும் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வட மங்கலக்குடி
நீரின் மாமுனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்தாட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே
(2)
பணங்கொள் ஆடரவு அல்குல் நல்லார் பயின்றேத்தவே
மணங்கொள் மாமயிலாலும் பொழில் மங்கலக்குடி
இணங்கிலா மறையோர் இமையோர் தொழுதேத்திட
அணங்கினோடு இருந்தான் அடியே சரணாகுமே
(3)
கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெலாம் அணமார் பொழில்சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பியேத்த வல்லார் வினையாயின வீடுமே
(4)
பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக்
குறைவிலா நிறைவே; குணமில் குணமே என்று
முறையினால் வணங்கும்அவர் முன்னெறி காண்பரே
(5)
ஆனிலம் கிளர் ஐந்தும் அவிர்முடியாடிஓர்
மானிலம் கையினான்; மணமார் மங்கலக்குடி
ஊனில் வெண்தலைக் கையுடையான் உயர் பாதமே
ஞானமாக நின்றேத்த வல்லார் வினை நாசமே
(6)
தேனுமாய் அமுதாகி நின்றான் தெளி சிந்தையுள்
வானுமாய் மதி சூடவல்லான் மங்கலக்குடி
கோனை நாள்தொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்
ஊனமானவை போயறும் உய்யும் வகையதே
(7)
வேள்படுத்திடு கண்ணினன்; மேரு வில்லாகவே
வாளரக்கர் புரமெரித்தான் மங்கலக்குடி
ஆளும் ஆதிப் பிரான் அடிகள் அடைந்தேத்தவே
கோளும் நாளவை போயறும் குற்றமில்லார்களே
(8)
பொலியும் மால்வரை புக்கெடுத்தான் புகழ்ந்தேத்திட
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடிப்
புலியின் ஆடையினான் அடியேத்திடும் புண்ணியர்
மலியும் வானுலகம் புக வல்லவர் காண்மினே
(9)
ஞாலமுன் படைத்தான் அளிர் மாமலர் மேலயன்
மாலும் காணவொணா எரியான்; மங்கலக்குடி
ஏலவார் குழலாள்ஒரு பாகம் இடங்கொடு
கோலமாகி நின்றான், குணம் கூறும் குணமதே
(10)
மெய்யின் மாசினர்; மேனி விரிதுவர் ஆடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனல் கங்கை செறிசடை
ஐயன் சேவடி ஏத்தவல்லார்க்கு அழகாகுமே
(11)
மந்தமாம் பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை எழிலார் பொழில் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்தவல்லார் இமையோர் முதலாவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page