திருப்பொன்னூசல்

<– திருவாசகம்

(1)
சீரார் பவளங் கால்முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்(கு)
ஊராகத் தந்தருளும் உத்தரகோசமங்கை
ஆரா அமுதின் அருள் தாளிணைபாடிப்
போரார் வேற்கண் மடவீர் பொன்னூசல் ஆடாமோ

(2)
மூன்றங்கிலங்கு நயனத்தன், மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித்தமுதூறித், தான் தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் !உத்தரகோசமங்கைக்
கோன் தங்(கு)இடைமருது பாடிக், குலமஞ்ஞை
போன்றங்(கு) அன நடையீர் பொன்னூசல் ஆடாமோ

(3)
முன்ஈறும் ஆதியும் இல்லான், முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்நீறெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தரகோசமங்கை
மின்னேறு மாட வியன்மாளிகை பாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ

(4)
நஞ்சமர் கண்டத்தன், அண்டத்தவர் நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி, அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம்ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ

(5)
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் – கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட்கொண்டருளி, நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தரகோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ

(6)
மாதாடு பாகத்தன் உத்தரகோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான், அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ

(7)
உன்னற்கரிய திரு உத்தரகோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ

(8)
கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞாலமிகப் பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருஉத்தரகோசமங்கை
மாலுக்கரியானை வாயார நாம்பாடிப்
பூலித்தகங் குழைந்து பொன்னூசல் ஆடாமோ

(9)
தெங்குலவு சோலைத் திருஉத்தரகோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page