(1)
முந்தி நின்ற வினைகள் அவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தமில்லா அடிகள் அவர் போலும்
கந்தமல்கு கமழ்புன் சடையாரே
(2)
மூவராய முதல்வர் முறையாலே
தேவரெல்லாம் வணங்கும் திருப்புன்கூர்
ஆவரென்னும் அடிகள் அவர் போலும்
ஏவினல்லார் எயில் மூன்றெரித்தாரே
(3)
பங்கயம் கண் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்க்
கங்கைதங்கு சடையார் அவர்போலும்
எங்கள்உச்சி உறையும் இறையாரே
(4)
கரையுலாவு கதிர்மா மணிமுத்தம்
திரையுலாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையில் நல்ல பெருமான் அவர்போலும்
விரையில் நல்ல மலர்ச் சேவடியாரே
(5)
பவள வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்
அழகரென்னும் அடிகள் அவர் போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே
(6)
தெரிந்திலங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிகள் அவர்போலும்
விரிந்திலங்கு சடைவெண் பிறையாரே
(7)
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆரநின்ற அடிகள் அவர் போலும்
கூர நின்ற எயில் மூன்றெரித்தாரே
(8)
மலையதனார் உடைய மதில் மூன்றும்
சிலையதனால் எரித்தார் திருப்புன்கூர்த்
தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை
மலையதனால் அடர்த்து மகிழ்ந்தாரே
(9)
நாடவல்ல மலரான் மாலுமாய்த்
தேட நின்றார் உறையும் திருப்புன்கூர்
ஆடவல்ல அடிகள் அவர் போலும்
பாடலாடல் பயிலும் பரமரே
(10)
குண்டு முற்றிக் கூறையின்றியே
பிண்டமுண்ணும் பிராந்தர் சொல் கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே
(11)
மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்
நாடவல்ல ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...