திருப்பாம்புரம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
சீரணிதிகழ் திருமார்பில் வெண்ணூலர், திரிபுரம்எரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை அண்ணல், கண்நுதல், விண்ணவரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே
(2)
கொக்கிறகோடு கூவிள மத்தம் கொன்றையொடு எருக்கணி சடையர்
அக்கினொடுஆமை பூண்டழகாக அனலதுஆடும் எம்அடிகள்
மிக்கநல் வேதவேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம் பல்பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னகராரே
(3)
துன்னலின்ஆடை உடுத்து, அதன்மேலோர் சூறைநல் அரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழ விட்டாடிப், பித்தராய்த் திரியும்எம் பெருமான்
மன்னு மாமலர்கள் தூவிட, நாளும் மாமலையாட்டியும் தாமும்
பன்னு நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன்னகராரே
(4)
துஞ்சுநாள் துறந்து தோற்றமும்இல்லாச் சுடர்விடு சோதிஎம் பெருமான்
நஞ்சுசேர் கண்டம் உடைய என் நாதர், நள்ளிருள் நடம்செயும்  நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயிலாட, மாடமாளிகை தன்மேலேறிப்
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே
(5)
நதிஅதன்அயலே நகு தலைமாலை, நாண்மதி சடைமிசை அணிந்து
கதிஅதுவாகக் காளிமுன் காணக் கானிடை நடம் செய்த கருத்தர்
விதிஅது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதிஅதுவாகப் பாவையும் தாமும் பாம்புர நன்னகராரே
(6)
ஓதி நன்குணர்வார்க்கு  உணர்வுடை ஒருவர், ஒளிதிகழ் உருவஞ்சேர் ஒருவர்
மாதினை இடமா வைத்த எம் வள்ளல், மான்மறி ஏந்திய மைந்தர்
ஆதிநீ அருளென்று அமரர்கள் பணிய, அலைகடல் கடைய அன்றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்த எம்பரமர் பாம்புர நன்னகராரே
(7)
மாலினுக்கன்று சக்கரம் ஈந்து, மலரவற்கொரு முகம் ஒழித்து
ஆலின்கீழ் அறமோர் நால்வருக்கருளி, அனலது ஆடும் எம்அடிகள்
காலனைக் காய்ந்து தம் கழலடியால், காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக்கருள்கள் செய்த எம்அடிகள் பாம்புர நன்னகராரே
(8)
விடைத்த வல்லரக்கன் வெற்பினைஎடுக்க, மெல்லிய திருவிரலூன்றி
அடர்த்தவன் தனக்கன்று அருள்செய்த அடிகள், அனலதுஆடும் எம்அண்ணல்
மடக்கொடிஅவர்கள் வருபுனலாட வந்திழி அரிசிலின் கரைமேல்
படப்பையில் கொணர்ந்து பருமணி சிதறும் பாம்புர நன்னகராரே
(9)
கடிபடு கமலத்தயனொடு மாலும் காதலோடு அடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யும் தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடைஅமரர் முனிகணத்தவர்கள் முறைமுறை அடிபணிந்தேத்தப்
படியதுவாகப் பாவையும் தாமும் பாம்புர நன்னகராரே
(10)
குண்டர் சாக்கியரும் குணமிலாதாரும், குற்றுவிட்டு உடுக்கையர் தாமும்
கண்டவாறுரைத்துக் கானிமிர்த்துண்ணும் கையர்தாம் உள்ளவாறறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டு நாம்செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்னகராரே
(11)
பார் மலிந்தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புர நன்னகராரைக்
கார் மலிந்தழகார் கழனிசூழ் மாடக் கழுமல முதுபதிக் கவுணி
நார் மலிந்தோங்கு நான்மறை ஞானசம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்தழகார் செல்வமது ஓங்கிச் சிவனடி நண்ணுவர் தாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page