(1)
முன்ன நின்ற முடக்கால் முயற்கருள் செய்து, நீள்
புன்னை நின்று கமழ் பாதிரிப் புலியூருளான்
தன்னை நின்று வணங்கும் தனைத்தவமில்லிகள்
பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே
(2)
கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்இலவம் முதுகாட்டுறையும் முதல்வன் இடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப்புலியூர் தனை
உள்ள நம்மேல் வினையாயின ஒழியுங்களே
(3)
மருளில் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர், மேல்
பொருளில் நல்லார் பயில் பாதிரிப்புலியூருளான்
வெருளின் மானின் பிணை நோக்கல் செய்து வெறிசெய்த பின்
அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகாகவே
(4)
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்
ஆதிநாலும் அவலம்இலாத அடிகள், மறை
ஓதி நாளும் இடும்பிச்சை ஏற்றுண்டுணப்பாலதே
(5)
ஆக நல்லார் அமுதாக்க உண்டான், அழல் ஐந்தலை
நாக நல்லார் பரவ நயந்தங்கரையார்த்தவன்
போக நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர் தனுள்
பாக நல்லாளொடு நின்ற எம்பரமேட்டியே
(6)
மதியமொய்த்த கதிர்போல் ஒளி மணற்கானல் வாய்ப்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூரெனும்
பதியில் வைக்கப்படும் எந்தை தன் பழந்தொண்டர்கள்
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகாகவே
(7)
கொங்கரவப் படு வண்டறை குளிர்கானல் வாய்ச்
சங்கரவப் பறையின் ஒலியவை சார்ந்தெழப்
பொங்கரவம் உயர் பாதிரிப்புலியூர் தனுள்
அங்கரவம் அரையில் அசைத்தானை அடைமினே
(8)
வீக்கமெழும் இலங்கைக்கிறை விலங்கல்லிடை
ஊக்கம்ஒழிந்தலற விரலால்இறை ஊன்றினான்
பூக்கமழும் புனல் பாதிரிப்புலியூர் தனை
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே
(9)
அன்னம் தாவும் அணியார் பொழில் மணியார் புன்னை
பொன்னம் தாதுசொரி பாதிரிப்புலியூர் தனுள்
முன்னந்தாவி அடி மூன்றளந்தவன் நான்முகன்
தன்னந்தாள் உற்றுணராததோர் தவ நீதியே
(10)
உரிந்தகூறை உருவத்தொடு தெருவத்திடைத்
திரிந்து தின்னும் சிறுநோன்பரும் பெருந்தேரரும்
எரிந்து சொன்ன அவ்வுரை கொள்ளாதே எடுத்தேத்துமின்
புரிந்த வெண்ணீற்றண்ணல் பாதிரிப்புலியூரையே
(11)
அந்தண் நல்லார் அகன் காழியுள் !ஞானசம்
பந்தன் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் தனுள்
சந்தமாலைத் தமிழ் பத்திவை தரித்தார்கள் மேல்
வந்துதீய அடையாமையால் வினை மாயுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...