(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
கண்பொலி நெற்றியினான், திகழ் கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான், மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதி சேர்தரு செஞ்சடை வேதியனூர்
தண்பொழில்சூழ் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(2)
விரித்தவன் நான்மறையை, மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள், இயலேழுலகில் உயிரும்
பிரித்தவன், செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளம் தன்னைத்
தரித்தவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(3)
உடுத்தவன் மானுரிதோல், கழலுள்க வல்லார் வினைகள்
கெடுத்தருள் செய்ய வல்லான், கிளர் கீதமொர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா, மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(4)
சூழ்தரு வல்வினையும், உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின், பாய்புனலும்
போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும் புனைந்த
தாழ்சடையான் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(5)
விடம்படு கண்டத்தினான், இருள் வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான், அவனெம் இறை, சேருமிடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணியும் கொணரும்
தடம்புனல் சூழ் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(6)
விடையுயர் வெல்கொடியான், அடி விண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான், மிகு பூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக்கும் அணிந்த
சடையவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(7)
மலையவன் முன்பயந்த மட மாதையொர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையால் புரமூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதிஆடரவும் அணிந்த
தலையவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(8)
செற்றரக்கன் வலியைத் திருமெல் விரலால் அடர்த்து
முற்றும் வெண்ணீறணிந்த திருமேனியன், மும்மையினான்
புற்றரவம் புலியின் உரிதோலொடு கோவணமும்
தற்றவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(9)
வில்மலை நாணரவம், மிகு வெங்கனல் அம்பதனால்
புன்மை செய் தானவர்தம் புரம் பொன்றுவித்தான், புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணு நாரணனும் அறியாத்
தன்மையன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(10)
ஆதர் சமணரொடும், மடைஐந்துகில் போர்த்துழலும்
நீதர் உரைக்கும் மொழியவை கொள்ளன்மின், நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ் புள்ளிரியப் பொழில்வாய்த்
தாதவிழும் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
(11)
தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரத்துக்
கண்ணயலே பிறையானவன் தன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர் தம்வினை பற்றறுமே