(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடும், அவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்து தண்புறவினில் கொன்றைபொன் சொரிதரத் துன்று பைம்பூம்
செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலியுறை செல்வர் தாமே
(2)
என்றுமோர் இயல்பினர் என நினைவரியவர், ஏறதேறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
துன்றுதண் பொழில் நுழைந்தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல் வந்துலவிய திருநெல்வேலி உறை செல்வர்தாமே
(3)
பொறிகிளர் அரவமும், போழிள மதியமும், கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவி, வெண்ணீறு பூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழியவர் மனம் கவர்வர்போலும்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலி உறை செல்வர்தாமே
(4)
காண்தகு மலைமகள் கதிர்நிலா முறுவல் செய்தருளவேயும்
பூண்ட நாகம் புறங்காடரங்கா நடமாடல் பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியம்
தீண்டி வந்துலவிய திருநெல்வேலி உறை செல்வர்தாமே
(5)
ஏனவெண் கொம்பொடும், எழில்திகழ் மத்தமும், இளஅரவும்
கூனல் வெண்பிறை தவழ் சடையினர், கொல்புலித் தோலுடையார்
ஆனினல் ஐந்துகந்தாடுவர், பாடுவர் அருமறைகள்
தேனில் வண்டமர் பொழில் திருநெல்வேலிஉறை செல்வர்தாமே
(6)
வெடிதரு தலையினர், வேனல் வெள்ளேற்றினர், விரிசடையர்
பொடியணி மார்பினர், புலியதள் ஆடையர், பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர், மாதரை மையல் செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலிஉறை செல்வர் தாமே
(7)
அக்குலாம் அரையினர், திரையுலா முடியினர், அடிகள், அன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார், கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர், வரிதரு வண்டு பண்முரலும் சோலைத்
திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலிஉறை செல்வர் தாமே
(8)
முந்திமா விலங்கல் அன்றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி ஒருவிரல் உகிர் நுதியால் அடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்து பூந்துறை கமழ் திருநெல்வேலிஉறை செல்வர் தாமே
(9)
பைங்கண் வாளரவணை அவனொடு, பனிமலரோனும் காணாது
அங்கணா அருளென அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்க நான்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வேலிஉறை செல்வர் தாமே
அங்கணா அருளென அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்க நான்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வேலிஉறை செல்வர் தாமே
(10)
துவருறு விரிதுகில் ஆடையர், வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை அவமென நினையும்எம் அண்ணலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்கள்ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல்வேலிஉறை செல்வர் தாமே
(11)
பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலிஉறை செல்வர் தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண் ஞானசம்பந்தன் சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடும் அருவினையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...