திருநெல்வெண்ணெய்:

<– நடுநாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
நல்வெணெய் விழுது பெய்தாடுதிர் நாள்தொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவியநீர் உமை நாள்தொறும்
சொல்வணம் இடுவது சொல்லே
(2)
நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத்தீரே
கச்சிள அரவசைத்தீர் உமைக் காண்பவர்
அச்சமொடருவினை இலரே
(3)
நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத்தீரே
அரைவிரி கோவணத்தீர் உமை அலர்கொடு
உரை விரிப்போர் உயர்ந்தோரே
(4)
நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி உறைய வல்லீரே
ஊர்மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே
(5)
நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத்தீரே
ஆடிளம் பாப்பசைத்தீர் உமை அன்பொடு
பாடும் உளமுடையவர் பண்பே
(6)
நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறை நுதலீரே
பெற்றிகொள் பிறை நுதலீர் உமைப் பேணுதல்
கற்றறிவோர்கள் தம் கடனே
(7)
நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடையீரே
கறையணி மிடறுடையீர் உமைக் காண்பவர்
உறைவதும் உம் அடிக்கீழே
(8)
நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்று
அரக்கனை அசைவு செய்தீரே
அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து
இருக்க வல்லார் இடரிலரே
(9)
நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்று
இருவரை இடர்கள் செய்தீரே
இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு
பரவ வல்லார் பழியிலரே
(10)
நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத்தீரே
சாக்கியச் சமண் கெடுத்தீர் உமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே
(11)
நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை
நலமல்கு ஞான சம்பந்தன்
நலமல்கு ஞான சம்பந்தன் செந்தமிழ்
சொல மல்குவார் துயரிலரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page