திருநெல்வாயில்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
புடையினார் புள்ளி கால் பொருந்திய
மடையினார் மணி நீர் நெல்வாயிலார்
நடையினால் விரற் கோவணம் நயந்து
உடையினார் எமது உச்சியாரே
(2)
வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம்
தாங்கினார், தலையாய தன்மையர்
நீங்கு நீர் நெல்வாயிலார்; தொழ
ஓங்கினார் எமது உச்சியாரே
(3)
நிச்சலேத்து நெல்வாயிலார் தொழ
இச்சையால் உறைவார் எம் ஈசனார்
கச்சையாவதோர் பாம்பினார்; கவின்
இச்சையார் எமது உச்சியாரே
(4)
மறையினார்; மழு வாளினார்; மல்கு
பிறையினார்; பிறையோடிலங்கிய
நிறையினார; நெல்வாயிலார்; தொழும்
இறைவனார் எமது உச்சியாரே
(5)
விருத்தனாகி வெண்ணீறு பூசிய
கருத்தனார்; கனலாட்டு உகந்தவர்
நிருத்தனார்; நெல்வாயில் மேவிய
ஒருத்தனார் எமது உச்சியாரே
(6)
காரினார்; கொன்றைக் கண்ணியார்; மல்கு
பேரினார்; பிறையோடிலங்கிய
நீரினார்; நெல்வாயிலார்; தொழும்
ஏரினார் எமது உச்சியாரே
(7)
ஆதியார் அந்தமாயினார்; வினை
கோதியார்; மதில் கூட்டழித்தவர்
நீதியார் நெல்வாயிலார்; மறை
ஓதியார் எமது உச்சியாரே
(8)
பற்றினான் அரக்கன் கயிலையை
ஒற்றினார் ஒரு கால் விரலுற
நெற்றியார் நெல்வாயிலார் தொழும்
பெற்றியார் எமது உச்சியாரே
(9)
நாடினார் மணிவண்ணன் நான்முகன்
கூடினார் குறுகாத கொள்கையர்
நீடினார்; நெல்வாயிலார்; தலை
ஓடினார் எமது உச்சியாரே
(10)
குண்டமண் துவர்க்கூறை மூடர் சொல்
பண்டமாக வையாத பண்பினர்
விண்தயங்கு நெல்வாயிலார்; நஞ்சை
உண்ட கண்டர் எம் உச்சியாரே
(11)
நெண்பயங்கு நெல்வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம்பந்தன் சொல்இவை
பண்பயன் கொளப் பாட வல்லவர்
விண்பயன் கொளும் வேட்கையாளரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page