திருநீலக்குடி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக்குடி அரனை நினை
சித்தமாகில் சிவகதி சேர்திரே
(2)
செய்ய மேனியன் தேனொடு பால்தயிர்
நெய்யதாடிய நீலக்குடிஅரன்
மையலாய் மறவா மனத்தார்க்கெலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே
(3)
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு
கூற்றன், மேனியில் கோலமதாகிய
நீற்றன், நீலக்குடி உடையான், அடி
போற்றினார் இடர் போக்கும் புனிதனே
(4)
நாலு வேதியர்க்கின்னருள் நன்னிழல்
ஆலன், ஆல நஞ்சுண்ட கண்டத்தமர்
நீலன், நீலக்குடியுறை நின்மலன்
காலனார்உயிர் போக்கிய காலனே
(5)
நேச நீலக்குடி அரனே எனா
நீசராய், நெடுமால் செய்த மாயத்தால்
ஈசனோர் சரம் எய்ய எரிந்துபோய்
நாசமானார் திரிபுர நாதரே
(6)
கொன்றை சூடியைக் குன்ற மகளொடும்
நின்ற நீலக்குடி அரனே எனீர்
என்றும் வாழ்வுகந்தே இறுமாக்கும் நீர்
பொன்றும் போது நுமக்கு அறிவொண்ணுமே
(7)
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்க, என் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே
(8)
அழகியோம் இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவியுடல் விடு முன்னமே
நிழலதார் பொழில் நீலக்குடி அரன்
கழல்கொள் சேவடி கைதொழுது உய்ம்மினே
(9)
கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள்
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடை நீலக்குடி அரன்
சுற்றித் தேவர் தொழும் கழற்சோதியே
(10)
தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்கனார் உடல்ஆங்கொர் விரலினால்
நெரித்து நீலக்குடி அரன் பின்னையும்
இரக்கமாய்அருள் செய்தன என்பரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page