(1)
ஏடுமலி கொன்றையரவு இந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையென் மைந்தன் இடமென்பர்
கோடுமலி ஞாழல் குரவேறு சுர புன்னை
நாடுமலி வாசமது வீசிய நள்ளாறே
(2)
விண்ணியல் பிறைப்பிள அறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்குமிடம் என்பர், புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடும் அடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே
(3)
விளங்கிழை மடந்தை மலைமங்கையொரு பாகத்து
உளங்கொள இருத்திய ஒருத்தன்இடம் என்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும் வழிபாடு செய் நள்ளாறே
(4)
கொக்கரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்
செக்கரவர் சேரும்இடம் என்பர், தடமூழ்கிப்
புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாம நினைவெய்திய நள்ளாறே
(5)
நெஞ்சமிது கண்டுகொள், உனக்கென நினைந்தார்
வஞ்சமது அறுத்தருளும் அற்றவனை, வானோர்
அஞ்ச முதுகாகியவர் கைதொழ எழுந்த
நஞ்சமுது செய்தவன் இருப்பிடம் நள்ளாறே
(6)
பாலன்அடி பேண, அவன் ஆருயிர் குறைக்கும்
காலனுடல் மாளமுன் உதைத்த அரன்ஊராம்
கோல மலர் நீர்க்குடம் எடுத்து மறையாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணிய நள்ளாறே
(7)
நீதியர் நெடுந்தகையர், நீண்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பரர், இருக்கை
வேதியர்கள் வேள்வி ஒழியாது மறைநாளும்
ஓதி அரன்நாமமும் உணர்த்திடு நள்ளாறே
(8)
கடுத்து வலரக்கன் முனெருக்கி வரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும்
அடர்த்தவர் தமக்கு இடமதென்பர், அளிபாட
நடத்த கலவைத் திரள்கள் வைகிய நள்ளாறே
(9)
உயர்ந்தவன் உருக்கொடு திரிந்துலகமெல்லாம்
பயந்தவன் நினைப்பரிய பண்பன்இடம் என்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்கு பொழிலெங்கும்
நயந்தரும வேத ஒலியார் திருநள்ளாறே
(10)
சிந்தை திருகல் சமணர் தேரர் தவமென்னும்
பந்தனை அறுத்தருள நின்ற பரமன் ஊர்
மந்த முழவம்தரு விழாஒலியும் வேதச்
சந்தம் விரவிப் பொழில் முழங்கிய நள்ளாறே
(11)
ஆடலரவார் சடையன், ஆயிழை தன்னோடும்
நாடு மலிவெய்திட இருந்தவன் நள்ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...