திருநணா:

<– கொங்கு நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
பந்தார் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, ஏறதேறி
அந்தார் அரவணிந்த அம்மான்இடம் போலும், அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் தெளிஒளிரத் தேமாங்கனி உதிர்க்கும் திருநணாவே
(2)
நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான், மற்றொருகை வீணையேந்தி
ஈட்டும் துயரறுக்கும் எம்மான்இடம் போலும், இலைசூழ் கானில்
ஓட்டம் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூழ்ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரைசேர்க்கும் திருநணாவே
(3)
நன்றாங்கிசை மொழிந்து நன்னுதலாள் பாகமாய், ஞாலமேத்த
மின்தாங்கு செஞ்சடையெம் விகிர்தர்க்கிடம் போலும், விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்திரைகள் மோத மயிலாலும் சாரல் செவ்வி
சென்றோங்கி வானவர்கள்ஏத்தி அடிபணியும் திருநணாவே
(4)
கையில் மழுவேந்திக் காலில் சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யின் முழுதணிந்த விகிர்தர்க்கிடம் போலும், மிடைந்து வானோர்
ஐய அரனே பெருமான் அருள் என்றென்று ஆதரிக்கச்
செய்ய கமலம் பொழிதேன் அளித்தியலும் திருநணாவே
(5)
முத்தேர் நகையாள் இடமாகத் தம் மார்பில் வெண்ணூல்பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தார் இடம்போலும், சோலைசூழ்ந்த
அத்தேன் அளியுண் களியால் இசைமுரல ஆலத்தும்பி
தெத்தே எனமுரலக் கேட்டார் வினைகெடுக்கும் திருநணாவே
(6)
வில்லார் வரையாக, மாநாக நாணாக, வேடங்கொண்டு
புல்லார் புரமூன்று எரித்தார்க்கிடம் போலும், புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அங்கழல்மேல் கைகூப்ப அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்லஅருள் புரியும் திருநணாவே
(7)
கானார் களிற்றுரிவை மேல்மூடி, ஆடரவொன்று அரைமேல் சாத்தி
ஊனார் தலையோட்டில் ஊணுகந்தான் தானுகந்த கோயில், எங்கும்
நானா விதத்தால் விரதிகள் நாமமே ஏத்தி வாழ்த்தத்
தேனார் மலர்கொண்டடியார் அடிவணங்கும் திருநணாவே
(8)
மன்னீர் இலங்கையர்தம் கோமான் வலிதொலைய விரலால்ஊன்றி
முந்நீர்க் கடல்நஞ்சை உண்டார்க்கிடம் போலும், முனைசேர் சீயம்
அன்னீர்மை குன்றி, அழலால் விழிகுறைய, வழியுமுன்றில்
செந்நீர் பரப்பச் சிறந்து கரிஒளிக்கும் திருநணாவே
(9)
மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான், மனைகள்தோறும்
கையார் பலியேற்ற கள்வன் இடம் போலும், கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற, மன்னிச்
செய்யார் எரியாம் உருவமுற வணங்கும் திருநணாவே
(10)
ஆடை ஒழித்தங்கமணே திரிந்துண்பார், அல்லல்பேசி
மூடும் உருவம் உகந்தார் உரையகற்று மூர்த்தி கோயில்
ஓடு நதிசேரு நித்திலமும் மொய்த்தகிலும் கரையில் சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றி ஒளிபெருகும் திருநணாவே
(11)
கல் வித்தகத்தால் திரைசூழ் கடற்காழிக் கவுணி சீரார்
நல் வித்தகத்தால் இனிதுணரு ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்துபாடல்
வல் வித்தகத்தால் மொழிவார் பழியிலர் இம்மண்ணின் மேலே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page