(1)
காடுபயில் வீடும், முடைஓடு கலன், மூடும் உடையாடை புலிதோல்
தேடுபலி ஊண், அதுவுடை வேடமிகு வேதியர் திருந்து பதிதான்
நாடகமதாட, மஞ்ஞை பாட, அரி கோடல் கைம்மறிப்ப, நலமார்
சேடுமிகு பேடைஅனம் ஊடிமகிழ் மாடமிடை தேவூர் அதுவே
(2)
கோளரவு கொன்றைநகு வெண்தலை எருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண் சலமகள் குலவு செஞ்சடை வரத்து இறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம் விரைக்கு மணமார்
தேளரவு தென்றல் தெருவெங்கும் நிறை ஒன்றிவரு தேவூர் அதுவே
(3)
பண்தடவு சொல்லின் மலைவல்லி உமை பங்கன், எமைஆளும் இறைவன்
எண்தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிதிருந்த இடமாம்
விண்தடவு வார்பொழில் உகுத்த நறவாடி மலர்சூடி விரையார்
சேண்தடவு மாளிகை செறிந்துதிரு ஒன்றிவளர் தேவூர் அதுவே
(4)
மாசின் மனநேசர் தமதாசை வளர் சூலதரன், மேலை இமையோர்
ஈசன், மறையோதி, எரியாடி, மிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூர் அதுவே
(5)
கானமுறு மான்மறியன், ஆனையுரி போர்வை, கனலாடல் புரிவோன்
ஏன எயிறாமை இளநாகம் வளர் மார்பில் இமையோர் தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவி பலாநிலவி வார்
தேனமுது உண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூர் அதுவே
(6)
ஆறினொடு கீறுமதி ஏறுசடை ஏறன், அடையார் நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன், எமை ஆளும் அரனூர்
வீறுமலர் ஊறுமது வேறி வளர்வாய விளைகின்ற கழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்ப இளவாளை வரு தேவூர் அதுவே
(7)
கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம் அன்றவிய நின்று நகைசெய்
எந்தனது சென்றுநிலை எந்தைதன தந்தைஅமர் இன்பநகர்தான்
முன்றின்மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவைக் குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி ஒன்ற விளையாடி வளர் தேவூர்அதுவே
(8)
ஓத மலிகின்ற தெனிலங்கை அரையன் மலி புயங்கள் நெரியப்
பாதமலிகின்ற விரல்ஒன்றினில் அடர்த்த பரமன் தனதிடம்
போத மலிகின்ற மடவார்கள் நடமாடலொடு பொங்கு முரவம்
சேதமலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர்அதுவே
(9)
வண்ண முகிலன்ன எழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ண மலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ண அனலங்கொள் பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடையின் மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தஇசை யாழ்மருவு தேவூர் அதுவே
(10)
பொச்சம்அமர் பிச்சை பயில் அச்சமணும் எச்சமறு போதியருமாம்
மொச்சை பயில் இச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்ச நகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
* * * * * *
(11)
துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்கள்இறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கைஉமை நங்கையொரு பங்கன்அமர் தேவூர்அதன்மேல்
பைங்கமலம் அங்கணிகொள் திண்புகலி ஞானசம்பந்தன் உரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்தும்இவை வல்லவர்கள் சங்கையிலரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...