திருத்தெள்ளேணம்

<– திருவாசகம்

(1)
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்காயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ

(2)
திருவார் பெருந்துறை மேய பிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும்ஆய பிரான் – அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ

(3)
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் – வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும் என்பது கேட்டுலகமெல்லாம்
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ

(4)
அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமானவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ

(5)
அருமந்த தேவர் அயன் திருமாற்கரிய சிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்தவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ

(6)
அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன் பங்கொடும் வந்தாண்ட திறம்
உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடுமா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ

(7)
ஆவா அரிஅயன் இந்திரன் வானோர்க்கரிய சிவன்
வாவா என்றென்னையும் பூதலத்தே வலித்தாண்டு கொண்டான்
பூவார் அடிச்சுவடென் தலைமேற் பொறித்தலுமே
தேவானவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ

(8)
கறங்கோலை போல்வதோர் காயப் பிறப்போடிறப்பென்னும்
அறம்பாவம் என்றிரண்டச்சந் தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான் மறவா வண்ணம் நல்கியஅத்
திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ

(9)
கல்நார்உரித்தென்ன என்னையுந்தன் கருணையினாற்
பொன்னார் கழல் பணித்தாண்ட பிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னா தென்னா என்று தெள்ளேணங் கொட்டாமோ

(10)
கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
புன வேயன வளைத்தோளியொடும் புகுந்தருளி
நனவே எனைப் பிடித்தாட்கொண்டவா நயந்து நெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ

(11)
கயல்மாண்ட கண்ணிதன் பங்கன் எனைக் கலந்தாண்டலுமே
அயல் மாண்(டு)அருவினைச் சுற்றமும் மாண்(டு)அவனியின் மேல்
மயல்மாண்டு மற்றுள்ள வாசகம் மாண்(டு)என்னுடைய
செயல்மாண்டவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ

(12)
முத்திக்குழன்று முனிவர் குழாம் நனிவாட
அத்திக்கருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக்கடலுட் பதித்த பரஞ்சோதி
தித்திக்குமா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ

(13)
பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ

(14)
மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே
நூலே நுழைவரியான் – நுண்ணியனாய் வந்தடியேன்
பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தாற்
சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ

(15)
உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
பருகற்கினிய பரங்கருணைத் தடங்கடலை
மருவித் திகழ் தென்னன் வார்கழலே நினைந்தடியோம்
திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ

(16)
புத்தன், புரந்தராதியர் அயன்மால் போற்றிசெயும்
பித்தன், பெருந்துறைமேய பிரான், பிறப்பறுத்த
அத்தன், அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ

(17)
உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல்உளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும்
செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ

(18)
வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல் நீர் மண்கெடினும்
தான்கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்(கு)
ஊன் கெட்(டு)உயிர் கெட்(டு)உணர்வு கெட்டென் உள்ளமும்போய்
நான்கெட்டவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ

(19)
விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார்வித்து
மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்
கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித்
தென்னா தென்னா என்று தெள்ளேணங் கொட்டாமோ

(20)
குலம்பாடிக் கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page