திருத்துருத்தி – சம்பந்தர் தேவாரம்:

<– திருத்துருத்தி

(1)
வரைத்தலைப் பசும்பொனோடு அருங்கலன்கள் உந்திவந்து
இரைத்தலைச் சுமந்து கொண்டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்தி புக்கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக்குணர்த்துமாறு வல்லமே
(2)
அடுத்தடுத்து அத்தியோடு வன்னி கொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப் பெய்தாய், துருத்தியார், ஓர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினால் நிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத்துரைக்குமாறு வல்லமாகில் நல்லமே
(3)
கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா, துருத்திபுக்கு
எங்குநின் இடங்களா அடங்கி வாழ்வதென் கொலோ
(4)
கருத்தினாலொர் காணியில் விருத்தியில்லை, தொண்டர்தம்
அருத்தியாற்றம் அல்லல்சொல்லி ஐயமேற்பதன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத்து உடம்புவிட்டு யோகியாய்
இருத்திநீ துருத்தி புக்கிதென்ன மாயம் என்பதே
(5)
துறக்குமா சொலப்படாய், துருத்தியாய், திருந்தடி
மறக்குமாறிலாத என்னை மையல்செய்திம் மண்ணின் மேல்
பிறக்குமாறு காட்டினாய், பிணிப்படும் உடம்புவிட்டு
இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே
(6)
வெயிற்கெதிர்ந்து இடங்கொடாது அகம்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந்து அணங்குசாயல் மாதொர்பாகமாக, மூ
எயிற்கெதிர்ந்தொர் அம்பினால் எரித்தவில்லி அல்லையே
(7)
கணிச்சியம்படைச் செல்வா, கழிந்தவர்க்கு ஒழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய், கரந்தையாய், துருத்தியாய்
அணிப்படும் தனிப்பிறைப் பனிக்கதிர்க்கு அவாவுநல்
மணிப்படும் பைநாகநீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே
(8)
சுடப் பொடிந்துடம்பிழந்து அநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடம் துருத்தியாக வெண்ணினாய்
கடற்படை உடையஅக் கடல்இலங்கை மன்னனை
அடற்பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே
(9)
களங்குளிர்ந்திலங்கு போது காதலானும் மாலுமாய்
வளங்கிளம் பொனங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம் பிறைச்செனித் துருத்தியாய், திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலாம் உகந்துகந்து உரைப்பனே
(10)
புத்தர், தத்துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
உத்தமம் எனக்கொளாது உகந்தெழுந்து, வண்டினம்
துத்தநின்று பண்செயும் சூழ்பொழில் துருத்திஎம்
பித்தர்பித்தனைத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே
(11)
கற்று முற்றினார் தொழும் கழுமலத்தருந்தமிழ்
சுற்றுமுற்றும் ஆயினான் அவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன்றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்றும் இன்மையில் குணங்கள் வந்து கூடுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page