திருத்தினை நகர்:

<– நடு நாடு

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 

சுந்தரர் தேவாரம்:

(1)
நீறு தாங்கிய திருநுதலானை
    நெற்றிக் கண்ணனை, நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையினானைக்
    குற்றம் இல்லியைக், கற்றையஞ்சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு
    அரிய சோதியை, வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(2)
பிணிகொள்ஆக்கை பிறப்பிறப்பென்னும்
    இதனைநீக்கி ஈசன் திருவடியிணைக்காள்
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள்நீ
    அஞ்சல் நெஞ்சமே, வஞ்சர்வாழ் மதில்மூன்று
அணிகொள் வெஞ்சிலையால் உகச் சீறும்
    ஐயன், வையகம் பரவி நின்றேத்தும்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(3)
வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
    மயலதுற்று வஞ்சனைக்கிடமாகி
முடியுமா கருதேல், எருதேறும்
    மூர்த்தியை, முதலாய பிரானை
அடிகள் என்று அடியார் தொழுதேத்தும்
    அப்பன், ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(4)
பாவமே புரிந்தகலிடம் தன்னில்
    பல பகர்ந்தலமந்து உயிர் வாழ்க்கைக்கு
ஆவ என்று உழந்தயர்ந்து வீழாதே
    அண்ணல் தன்திறம் அறிவினால் கருதி
மாவின் ஈருரி உடை புனைந்தானை
    மணியை, மைந்தனை, வானவர்க்கமுதைத்
தேவ தேவனைத், திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(5)
ஒன்றலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு
    உடல் தளர்ந்து அருமா நிதிஇயற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
    இதுவும் பொய்யெனவே நினை உளமே
குன்றுலாவிய புயமுடையானைக்
    கூத்தனைக் குலாவிக் குவலயத்தோர்
சென்றெலாம் பயில் திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(6)
வேந்தராய் உலகாண்டறம் புரிந்து
    வீற்றிருந்த இவ்வுடலிது தன்னைத்
தேய்ந்திறந்து வெந்துயர் உழந்திடும்இப்
    பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்தளம் கையில் ஆட்டுகந்தானைப்
    பரமனைக், கடற்சூர் தடிந்திட்ட
சேந்தர் தாதையைத், திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(7)
தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
    தவம் முயன்று அவமாயின பேசிப்
பின்னலார் சடைகட்டி என்பணிந்தால்
    பெரிதும் நீந்துவதரிது அதுநிற்க
முன்னெலாம் முழுமுதலென்று வானோர்
    மூர்த்தியாகிய முதலவன் தன்னைச்
செந்நெலார் வயல் திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(8)
பரிந்த சுற்றமும் மற்றுவன் துணையும்
    பலரும் கண்டழுதெழ உயிர் உடலைப்
பிரிந்து போம்இது நிச்சயம் அறிந்தால்
    பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்தடம் கண்ணி பங்கனை, உயிரைக்
    கால காலனைக், கடவுளை, விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(9)
நமையெலாம் பலர் இகழ்ந்துரைப்பதன் முன்
    நன்மை ஒன்றிலாத் தேரர், புன் சமணாம்
சமயமாகிய தவத்தினார் அவத்தத்
    தன்மை விட்டொழி, நன்மையை வேண்டில்
உமையொர் கூறனை, ஏறுகந்தானை
    உம்பர் ஆதியை, எம்பெருமானைச்
சிமயமார் பொழில் திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(10)
நீடு பொக்கையில் பிறவியைப் பழித்து
    நீங்கலாம்என்று மனத்தினைத் தெருட்டிச்
சேடுலாம் பொழில் திருத்தினை நகருள்
    சிவக்கொழுந்தினைத் திருவடி இணைதான்
நாடலாம், புகழ் நாவலூராளி
    நம்பி வன்தொண்டன் ஊரன் உரைத்த
பாடலாம் தமிழ் பத்திவை வல்லார்
    முத்தியாவது பரகதிப் பயனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page