(1)
காலையெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம், விரையால் மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
மாலை மதியமன்றோ எம்பிரானுக்கு அழகியதே
(2)
வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவும்
கொண்டணைந்தேறு முடியுடையான் குரைசேர் கழற்கே
தொண்டணைந்தாடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
வெண்தலை மாலையன்றோ எம்பிரானுக்கு அழகியதே
(3)
அளக்கு நெறியின் அன்பர்கள்தம் மனத்தாய்ந்து கொள்வான்
விளக்கும் அடியவர் மேல்வினை தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்கும் குழையணி சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
திளைக்கும் மதியமன்றோ எம்பிரானுக்கு அழகியதே
(4)
ஆய்ந்தகை வாளரவத்தொடு மால்விடையேறி எங்கும்
பேர்ந்தகை மான்இடம் ஆடுவர், பின்னு சடையிடையே
சேர்ந்த கைம்மாமலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்துகைச் சூலமழுஎம் பிரானுக்கு அழகியதே
(5)
கூற்றைக் கடந்ததும், கோளரவார்த்ததும், கோள்உழுவை
நீற்றில் துதைந்து திரியும் பரிசதும் நாமறியோம்
ஆற்றில் கிடந்தங்கலைப்ப வலைப்புண்டு அசைந்ததொக்கும்
சோற்றுத்துறை உறைவார் சடைமேலதொர் தூமதியே
(6)
வல்லாடி நின்று வலி பேசுவார், கோளர், வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்திறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில்லாடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே
(7)
ஆயமுடையது நாமறியோம், அரணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியும் எய்தும் துயக்கறுத்தான்
தூய வெண்ணீற்றினன், சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
பாயும் வெண்ணீர்த் திரைக்கங்கை எம்மானுக்கு அழகியதே
(8)
அண்டர் அமரர் கடைந்தெழுந்தோடிய நஞ்சதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இண்டை மதியமன்றோ எம்பிரானுக்கு அழகியதே
(9)
கடல்மணி வண்ணன், கருதிய நான்முகன் தானறியா
விடமணி கண்டம் உடையவன், தானெனை ஆளுடையான்
சுடரணிந்தாடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
படமணி நாகமன்றோ எம்பிரானுக்கு அழகியதே
(10)
இலங்கைக்கிறைவன் இருபது தோளும் முடிநெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்தழித்த
துலங்கல் மழுவினன், சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
இலங்கு மதியமன்றோ எம்பிரானுக்கு அழகியதே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...