(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
நிறைவெண்திங்கள் வாள்முக மாதர்பாட, நீள்சடைக்
குறைவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம்சூழ் சிற்றேமத்தான்
இறைவன்என்றே உலகெலாம் ஏத்தநின்ற பெருமானே
(2)
மாகத்திங்கள் வாள்முக மாதர்பாட, வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோர் ஆடல்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடை சிற்றேமம் மேவினான்
ஆகத்தேர்கொள் ஆமையைப் பூண்டவன் அண்ணல் அல்லனே
(3)
நெடுவெண்திங்கள் வாள்முக மாதர்பாட, நீள்சடைக்
கொடுவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
படுவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம்சூழ் சிற்றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினால் காய்ந்த கடவுள் அல்லனே
(4)
கதிரார் திங்கள் வாள்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார் திங்கள் சூடியோர் ஆடல்மேய முக்கணன்
எதிரார் புனலம் புன்சடை எழிலாரும் சிற்றேமத்தான்
அதிரார் பைங்கண் ஏறுடை ஆதிமூர்த்தி அல்லனே
(5)
வானார்திங்கள் வாள்முக மாதர்பாட, வார்சடைக்
கூனார் திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயும் திருவாரும் சிற்றேமத்தான்
மானார்விழி நன்மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே
(6)
பனி வெண் திங்கள் வாள்முக மாதர்பாடப், பல்சடைக்
குனி வெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
தனி வெள்விடையன் புள்ளினத் தாமம்சூழ் சிற்றேமத்தான்
முனிவு மூப்புநீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே
(7)
கிளரும் திங்கள் வாள்முக மாதர்பாடக், கேடிலா
வளரும் திங்கள் சூடியோர் ஆடல்மேய மாதவன்
தளிரும்கொம்பு மதுவுமார் தாமம்சூழ் சிற்றேமத்தான்
ஒளிரும் வெண்ணூல் மார்பன்என் உள்ளத்துள்ளான் அல்லனே
(8)
சூழ்ந்த திங்கள் வாள்முக மாதர் பாடச், சூழ்சடைப்
போழ்ந்த திங்கள் சூடியோர் ஆடல்மேய புண்ணியன்
தாழ்ந்தவயல் சிற்றேமத்தான் தடவரையைத் தன் தாளினால்
ஆழ்ந்த அரக்கன் ஒல்கஅன்று அடர்த்த அண்ணல் அல்லனே
(9)
தனி வெண்திங்கள் வாள்முக மாதர்பாடத், தாழ்சடைத்
துணி வெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய தொன்மையான்
அணிவண்ணச் சிற்றேமத்தான் அலர்மேல் அந்தணாளனும்
மணிவண்ணனும் முன்காண்கிலா மழுவாள் செல்வன் அல்லனே
(10)
வெள்ளைத் திங்கள் வாள்முக மாதர்பாட, வீழ்சடைப்
பிள்ளைத் திங்கள் சூடியோர் ஆடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார் சிற்றேமத்தான் உருவார், புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கி உள்கரந்து வைத்தான் அல்லனே
(11)
கல்லில் ஓதமல்கு தண்கானல் சூழ்ந்த காழியான்
நல்லவாய இன்தமிழ் நவிலும் ஞானசம்பந்தன்
செல்வனூர் சிற்றேமத்தைப் பாடல் சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...