திருச்சாத்தமங்கை:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணி தன்னோடுடனாவதும் ஏற்பதொன்றே
பெருமலர்ச் சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ்சாத்தமங்கை
அருமலர் ஆதிமூர்த்தீ அயவந்தி அமர்ந்தவனே
(2)
பொடிதனைப் பூசுமார்பில், புரிநூல் ஒருபால் பொருந்தக்
கொடியன சாயலாளோடு உடனாவதும் கூடுவதே
கடிமணம் மல்கிநாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே
(3)
நூல்நலம் தங்குமார்பில் நுகர் நீறணிந்து, ஏறதேறி
மானன நோக்கி தன்னோடுடனாவது மாண்பதுவே
தானலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை
ஆனலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே
(4)
மற்றவில் மால்வரையா மதிலெய்து, வெண்ணீறு பூசிப்
புற்றரவு அல்குலாளோடு உடனாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த அயவந்தி அமர்ந்தவனே
(5)
வெந்த வெண்ணீறுபூசி விடையேறிய வேதகீதன்
பந்தணவும் விரலாளுடன் ஆவதும் பாங்கதுவே
சந்தம்ஆறங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை
அந்தமாய் ஆதியாகி அயவந்தி அமர்ந்தவனே
(6)
வேதமாய் வேள்வியாகி, விளங்கும் பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகம், நிலைதான் சொல்லலாவதொன்றே
சாதியான் மிக்கசீரால் தகுவார் தொழும்  சாத்தமங்கை
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே
(7)
இமயமெல்லாம் இரிய மதிலெய்து, வெண்ணீறுபூசி
உமையைஓர் பாகம் வைத்த, நிலைதான் உன்னலாவதொன்றே
சமயம் ஆறங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை
அமைய வேறோங்கு சீரான் அயவந்தி அமர்ந்தவனே
(8)
பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே
(9)
பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும், பெண்ணோர் பாகம்
ஈரெழில் கோலமாகி உடனாவதும் ஏற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு கனகம்அனையானும் காணா
ஆரழல் வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே
(10)
கங்கையோர் வார்சடைமேல் அடையப் புடையே கமழும்
மங்கையோடொன்றி நின்றம்மதிதான் சொல்லலாவதொன்றே
சங்கையில்லா மறையோர் அவர் தாந்தொழு சாத்தமங்கை
அங்கையில் சென்னி வைத்தாய் அயவந்தி அமர்ந்தவனே
(11)
மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம்பந்தன் மன்னும்
நிறையினார் நீலநக்கன் நெடுமா நகரென்று தொண்டர்
அறையும்ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்
முறைமையால் ஏத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page