திருக்கோளிலி – அப்பர் தேவாரம் (1):

<-- திருக்கோளிலி

(1)
மைக்கொள் கண் உமை பங்கினன்; மான்மழுத்
தொக்க கையினன்; செய்யதோர் சோதியன்
கொக்கமர் பொழில் சூழ்தரு கோளிலி
நக்கனைத் தொழ நம்வினை நாசமே
(2)
முத்தினை; முதலாகிய மூர்த்தியை
வித்தினை; விளைவாய விகிர்தனைக்
கொத்தலர் பொழில் சூழ்தரு கோளிலி
அத்தனைத் தொழ நீங்கும்நம் அல்லலே
(3)
வெண்திரைப் பரவை விடமுண்டதோர்
கண்டனைக் கலந்தார் தமக்கன்பனைக்
கொண்டலம் பொழில் கோளிலி மேவிய
அண்டனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே
(4)
பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவும் கங்கையும் திங்களும் ஒண்சடை
குலவினான் குளிரும் பொழில் கோளிலி
நிலவினான் தனை நித்தல் நினைமினே
(5)
அல்லலாயின தீரும்; அழகிய
முல்லை வெண்முறுவல் உமை அஞ்சவே
கொல்லை யானை உரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே
(6)
ஆவின் பால்கண்ட அளவில் அருந்தவப்
பாலன் வேண்டலும் செல்லென்று பாற்கடல்
கூவினான்; குளிரும் பொழில் கோளிலி
மேவினானைத் தொழ வினை வீடுமே
(7)
சீர்த்த நன் மனையாளும் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்றிலை ஆதலால்
கூத்தனார் உறையும் திருக்கோளிலி
ஏத்தி நீர் தொழுமின் இடர் தீருமே
(8)
மாலதாகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடைமுடியா முனம்
கோல வார்பொழில் கோளிலி மேவிய
நீலகண்டனை நின்று நினைமினே
(9)
கேடு மூடிக் கிடந்துண்ணும் நாடது
தேடி நீர் திரியாதே; சிவகதி
கூடலாம் திருக்கோளிலி ஈசனைப்
பாடுமின் இரவோடு பகலுமே
(10)
மடுத்து மாமலை ஏந்தலுற்றான் தனை
அடர்த்துப் பின்னும் இரங்கி அவற்கருள்
கொடுத்தவன் உறை கோளிலியே தொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page